ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்!! வைகோ அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Mar 16, 2019, 9:38 AM IST
Highlights

ஈரோடு மக்களவை தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
 

வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40  மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுக  தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது. இதில் திமுகவுக்கு 20 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதே போல் இடது சாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதியும், இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுளளது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை தொகுதியில் எழுத்தாளர் வெங்கடேசனும், கோவையில் பி.ஆர்.நடராஜனும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிபிஐ சார்பில் செல்வராஜ் நாகை தொகுதியிலும், சுப்பராயன் திருப்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் நவாஸ் கனி போட்டியிடுகிறார். இதே போல் பெரம்பலுரில் பாரி வேந்தரும், நாமக்கல் தொகுதியில் கொமதேக சார்பில் ஈஸ்வரன் போட்டியிடுகிறார்.

அதே நேரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பிடித்துள்ள மதிமுவுக்கு ஒரு மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மக்களவை தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், ஈரோடு மக்களவை தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.கணேசமூர்த்தி ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடுவார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 

அ.கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளர் பொறுப்பை வகித்து வருகிறார். வரும் 19 ஆம் தேதி அ.கணேசமூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!