கஜாவை விட ஆயிரம் மடங்கு கொடூரமானது இந்த அரசாங்கத்தின் ஊழல்... தெளிய தெளிய அடித்து நொறுக்கும் தினகரன்!

By vinoth kumarFirst Published Dec 2, 2018, 4:34 PM IST
Highlights

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்துக்காக அரசாங்கம் கொள்முதல் செய்து வாங்கி வரும் அத்தனை பொருட்களின் தரத்திலும் ஊழல் நடந்து, கோடி கோடியாய் ஒவ்வொரு துறையிலும் சுருட்டல்கள் நடந்திருப்பதாக விளாசிக் கட்ட துவங்கியிருக்கிறார் தினகரன். 

கஜா புயலை வைத்து யார் காரியம் சாதிக்கிறார்களோ இல்லையோ...தினகரன் செமத்தியாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார். பதினோறு நாட்கள் டெல்டாவில் தங்கி, புயல் பாதிப்பு பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் சென்று முதல்வர்கள் இருவரையும், அமைச்சர்கள் அத்தனை பேரையும் விளாசி தள்ளினார். பேசினார் என்பதை விட பிரசாரம் செய்தார் என்பதுதான் சரியான பதம். 

டெல்டாவில் தங்கியிருந்து இந்த கூத்துக்களை அரங்கேற்றியவர், இப்போது அதைவிட்டு வெளியேறிய பின் வேறு வகையில் அரசுக்கு குடைச்சல்களை கொடுக்க துவங்கிவிட்டார். அதாவது கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்துக்காக அரசாங்கம் கொள்முதல் செய்து வாங்கி வரும் அத்தனை பொருட்களின் தரத்திலும் ஊழல் நடந்து, கோடி கோடியாய் ஒவ்வொரு துறையிலும் சுருட்டல்கள் நடந்திருப்பதாக விளாசிக் கட்ட துவங்கியிருக்கிறார் தினகரன். 

ஏற்கனவே பெட்ஷீட்கள் கைத்தறி சங்கங்களில் வாங்காமல், தனியார் விசைத்தறி நிறுவனங்களிடமிருந்து தரமற்ற ரகத்தில் வாங்கப்படுவதாக கிளம்பியிருக்கும் புகாரை வைத்த ஒரு அரசியல் செய்தார் தினகரன். இப்போது அதற்கடுத்து, மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு செக் வைக்க துவங்கியுள்ளார் இப்படி...

“மின்சார துறைக்கு இருநூறு கோடி ரூபாய் மத்திய அரசு உடனடியாக வழங்கியிருக்கிறது என்று சொன்னார் அத்துறை அமைச்சர் தங்கமணி. ஆனால் இந்த பணத்தில் வாங்கியிருப்பதெல்லாம் தரமற்ற தளவாடங்கள் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். நான் குற்றம் சாட்டுவதற்கு ஆதாரம் இருக்கிறது. சேதமடைந்த லட்சக்கணக்கான மின் கம்பங்களுக்கு  மாற்றாக தற்போது புதிய மின் கம்பங்கள் வாங்கப்பட்டுள்ளன. தரமற்ற இரும்பு மற்றும் சிமெண்டினால் செய்யப்படுள்ள மின் கம்பங்களை வாங்கியிருக்கிறார்கள். 

இதை மெய்ப்பிக்கும் ஒரு சம்பவமும் உள்ளது. மன்னார்குடியில் ஒரு இடத்தில் மின் கம்பம் நடும்போது, கம்பத்தின் மேலே ஊழியர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அது உடைந்து சரிய, மின்வாரிய ஊழியர் இருபது அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து அவரது முதுகெழும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

ஆக தரமற்ற மின் தளவாடங்களை வாங்கி வைத்து இவர்கள் என்ன நிவாரணத்தை சாதிக்கப்போகிறார்கள்? ஏற்கனவே கஜா புயல் பல கோடி மதிப்புள்ள உடைமைகளை சூறையாடிவிட்டது, ஆனால் இவர்களின் ஊழலால் நடைபெறும் புணரமைப்பு பணிகளால் எத்தனை பேரின் உயிர் சூறையாடப்பட போகிறதோ! ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், கஜா செய்த கலகத்தை விட ஆயிரம் மடங்கு குரூரமானது, இந்த அரசு செய்யும் ஊழல் நிவாரணம்.” என்று வெளுத்தெடுத்திருக்கிறார்.

click me!