சென்னையில் முழு ஊரடங்கா..? இ-பாஸ் ரத்தா..? நீதிமன்றத்தில் உண்மையை போட்டுடைத்த தமிழக அரசு..!

By vinoth kumarFirst Published Jun 12, 2020, 1:01 PM IST
Highlights

சென்னையில் ஊரடங்கை 100 சதவீதம் தீவிரப்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னையில் ஊரடங்கை 100 சதவீதம் தீவிரப்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் சென்னையில் 1407 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 38,716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில்,  27,398 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இதன் காரணமாக, சென்னையில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் எனவும், முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் உலா வருகின்றன. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று பொதுநல வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரித்து முடித்த பின், தமிழக அரசின் அரசு தரப்ப வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணிடம் கொரோனா விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

அப்போது, நீதிபதிகள், சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால், முழு ஊரடங்கு உள்ளிட்ட சிறப்பு திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா, தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் உள்ளதா என்று கேட்டனர். இதுதொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு எதையும் எடுக்கவில்லை. அதேநேரத்தில், தமிழக குடிமக்கள் என்ற முறையிலும், பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் இக்கேள்வியை எழுப்புகிறோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் இது சம்பந்தமாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகத் தெரிவித்தார். 

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறுகையில்;- சென்னையில் ஊரடங்கை 100 சதவீதம் தீவிரப்படுத்தும் திட்டம் தற்போது இல்லை. நோய் கட்டுப்பாடு பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இ-பாஸ் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி வதந்தி. தமிழகத்தில் இ-பாஸ் வழங்கப்படுவது நிறுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நிபுணர் குழுவின் அறிவுரைகளின்படி அவ்வப்போது முடிவு எடுக்கப்பட்டு வருகிறோம் என்றனர். இதனையடுத்து, ஊரடங்கை தீவிரப்படுத்த கோரிய வழக்கு வரும் திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

click me!