பாபர் மசூதி இடிக்கப்பட்டது முதல் தீர்ப்பு வரை..!! நடந்தது என்ன முழு விவரம்...!!

By Ezhilarasan BabuFirst Published Sep 30, 2020, 1:51 PM IST
Highlights

"வாதியும் ,பிரதி வாதியும் இறந்துவிடுவான் ஆனால் வழக்கு மட்டும் வாழ்ந்து கொண்டே இருக்கும்" என்பது போல இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 17 பேர் இறந்து விட்டனர்.  

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் லட்சக்கணக்கான கரசேவகர்கள் மத ஊர்வலம் என்ற பெயரில் அத்துமீறி நுழைந்து பாபர் மசூதியை தகர்த்தார்கள். ஊர்வலத்தில் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் நம்பிக்கைகளுக்காக ஆயுதம் ஏந்தி செல்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும் துல்லியமாக திட்டமிடப்பட்டு கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் வரலாறுகளில் உள்ளன. 5 மணி நேரங்களாக இடைக்கப்பட்ட பாபர் மசூதி ஒரு கட்டத்திற்கு பின்பு அதன் கட்டிட அமைப்பு நிலை மாறியது ! இந்தியா மட்டுமின்றி உலக அளவில் இதன் தாக்கம் பிரதிபலிக்க தொடங்கியது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 2 வழக்குகள் பதிவு செய்கிறார்கள். 

முதல் வழக்கில் யாரென்றே தெரியாத ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் மீது கொள்ளை , திருட்டு , பொது அமைதிக்கு இடைஞ்சல் மற்றும் இரண்டாவது வழக்கு இரு மதங்களுக்கிடையே சண்டை ஏற்படுத்துவது , தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் செயல்களை செய்வது , பொது நலனுக்கு ஊறு விளைவித்தல் போன்ற குற்றங்களுக்காக பாஜக-ன் சங் பரிவார் தலைவர்களான எல்.கே.அத்வானி, அசோக் சிங்கால், வினை கட்டியர், சாத்வி ரிதம்பர, முரளி மனோகர் ஜோஷி , உமா பாரதி , கிரிராஜ் கிஷோர் மற்றும் விஷ்ணு ஹரி டால்மியா உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த இரண்டு வழக்குகள் தவிர்த்து பல்வேறு காவல்நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட முதல் தகவல் பதியப்பட்டுள்ளது. அயோத்தியில் வெடித்த கலவரம் இந்தியா முழுவதும் பரவ தொடங்கியது; ஒரு புறம் நீதி வேண்டும் என போராட்டம் , மற்றொரு புறம் பழிதீர்க்க வேண்டும் என கலவரம் இதற்கு மத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரணை செய்ய அன்றைய மத்திய அரசு தனி விசாரணை கமிஷன் அமைத்தது. 

விசாரணையில் பாரதிய ஜனதா கட்சி , விஷ்வ இந்து பரிஷீத் தலைவர்கள் உள்ளிட்ட 68 பேர் இதற்கு காரணம் என ஆணையம் அறிக்கை அளித்தது. இதனை அடிப்படையாக வைத்து மீண்டும் புதிய வழக்கு பதிவு செய்ய வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம் எல்.கே.அத்வானி உட்பட பாஜக தலைவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ வழக்கு தொடர , தீர்ப்பின் மீது மறுபரிசீலனை செய்யமாறு லக்னோ சி.பி.ஐ நீதிமன்றதிற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. வழக்கின் விசாரணை மீண்டும் தொடங்கியது. "வாதியும் ,பிரதி வாதியும் இறந்துவிடுவான் ஆனால் வழக்கு மட்டும் வாழ்ந்து கொண்டே இருக்கும்" என்பது போல இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 17 பேர் இறந்து விட்டனர்.  32 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது கொண்டே இருந்தது. வழக்கை விரைந்து விசாரிக்கை கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதாவது, 2017ம் ஆண்டில் இருந்து லக்னோவில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் உச்சநீதிமன்றதின் கண்காணிப்பில் தினசரி விசாரணை நடைபெற தொடங்கியது. 

தகவலின்படி 350 சாட்சிகள் இந்த இடைப்பட்ட காலத்தில் விசாரிக்கப்பட்டு உள்ளனர். அதில்; அச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அதை வீடியோ பதிவு செய்தவர்கள் , அயோத்தி வாழ் மக்கள் , குற்றம்சம்பங்களில் ஈடுபட்டவர்கள் என தனி தனியாக விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் தேவையான ஆதாரம் கிடைத்ததாக கருதிய லக்னோ சிறப்பு நீதிமன்றம் முக்கிய தலைவர்களிடம் வாக்கு மூலங்களை வீடியோ பதிவு செய்ய திட்டமிட்டனர். குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உள்ளிட்ட 32 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி கடந்த 41 நாட்களாக நடைபெற்றது, இதில் கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலானோர் காணொலி காட்சி மூலம் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். வழக்கின் முழுமையான விசாரணை செப்டம்பர் 2ம் தேதி நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதில் இன்று லக்னே சிறப்பு நீதிமன்ற நீதிபதி  எஸ்.கே யாதவ், சுமார் 2000 பக்க தீர்ப்பை வாசித்தார் அதில், மசூதி இடிக்கப்பட்டது என்பது திட்டமிட்ட செயல் அல்ல எனவும், அதேபோல் கலவரம் நடந்தபோது அதை தடுக்கவே தலைவர்கள் முயன்றனர் என்றும், இதுவரை இவர்கள் சதி செய்தனர் என்பதற்கான எந்த வலுவான ஆதாரங்களும் இல்லை, என்பதால் இந்த வழக்கில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்கிறேன் என அவர் கூறினார். நீதிபதியின் இந்த அதிரடி தீர்ப்பு பாஜக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

click me!