8 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி…. செங்கோட்டையன் அதிரடி !!!

By Selvanayagam PFirst Published Jan 21, 2019, 7:11 PM IST
Highlights

தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வந்த நிலையில் வரும் கல்வி ஆண்டு முதல் 8 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் சிறிய அளவிலான இலவச மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அத்துறையில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அரசு பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள், பள்ளிக் கல்வித்துறைக்கென தனி தொலைக்காட்சி என அடுக்கடுக்காக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மாணவர்கள் மற்றும் பொற்றோர் இடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் இருந்து 50 மாணவ-மாணவிகளை தேர்ந்தெடுத்து  அவர்களை வெளி நாடுகளுக்கு கல்வி சுற்றுலா அனுப்பும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

முதன் முறையாக 50 மாணவர்கள்  பின்லாந்துக்கு கல்விச்சுற்றுலா செல்ல உள்ளனர். அவர்களுக்கு பாஸ்போர்ட், விமான டிக்கெட் போன்றவற்றை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும் என்று கூறினார். . 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன்,  அரசு பள்ளி மாணவ, மாணவிகள் ஆயிரம் பேர் வரையில் மருத்துவப் படிப்பில் சேர்ப்பதே அரசின் லட்சியம் என்றும்  கூறினார்.

12 ஆம் வகுப்பு வணிகவியல் படிக்கும் மாணவ, மாணவிகள் 500 பேர் வரை ஆடிட்டிங் பிரிவு பட்டப்படிப்பில் சேர்க்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

click me!