ஸ்டாலினும், ராசாவும் தேர்தல் நேரத்துல வெளியே இருக்கவேகூடாது... பழைய வழக்குகளை தோண்டி துருவும் எடப்பாடி..!

By Vishnu PriyaFirst Published Jan 21, 2019, 6:18 PM IST
Highlights

பழைய மர்ம மரணங்களை விசாரிக்கும் இந்த வேகம் யோசனைக்கு அப்பாற்பட்டு பறந்து கொண்டிருக்கிறது. மூன்று வழக்கிலோ அல்லது இது தொடர்பான வேறு விவகாரங்களிலோ ஸ்டாலின் மற்றும் ராசாவை சிக்க வைத்து, தேர்தல் நடைபெறு நேரத்தில் அவர்கள் பிரதான அரசியலிலும் இருக்க கூடாது, பிரசாரத்துக்கு வரும் நிலையிலும் இருந்திட கூடாது! என்பதே அதிகார மையம் ஒன்றின் இலக்காக உள்ளதாம். 

தமிழகத்தில் இப்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி இரு முகாம்களுக்குள்ளும் நடக்கும் யுத்தத்தின் ஆயுதங்களாக இருப்பவை எவை தெரியுமா?....மண்ணும், புழுக்களும் தின்று எலும்புகளின் சிதைவுகள் மட்டுமே மிச்சமிருக்கும் பிணங்களின் எச்சங்கள்தான். 

ஆம், யதார்த்தம் இதுதான். கொடநாடு கொலை, கொள்ளை, மர்ம மரணங்கள் விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடியாரின் தலையும் உருட்டப்படும் விவகாரம் உலகமறிந்ததே. சயான் மற்றும் வாளையாரு மனோஜ் இருவரின் வாக்குமூலத்தை ஏதோ குற்றப்பத்திரிக்கை போல் பாவித்து முதல்வரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் உடனே பதவி விலக வேண்டும்! என்றெல்லாம் குதிக்கிறார். அவரோடு  இணைந்து ஆ.ராசாவும் பழைய விஷயங்களை எடுத்து வைத்து அ.தி.மு.க.வை கிழித்துத் தோரணம் கட்டி தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறார். 

எல்லாம் ‘2ஜி விவகாரத்தில் தன்னை திட்டியதற்கான பழிவாங்கல்கள்.’ என்று ராசாவின் ஆதரவாளர்கள் சந்தோஷிக்கிறார்கள். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ‘புடம் போட்ட பொய்’ என்று மறுக்கிறார் எடப்பாடியார். அதேவேளையில் கொடநாடு விவகாரத்தை வைத்து தங்களிடம் ஓவராய் துள்ளிக் கொண்டிருக்கும் தி.மு.க.வுக்கு சரியான செக் வைக்க நினைக்கிறது அ.தி.மு.க. அதனால் தி.மு.க.வுக்கு தொடர்புடைய வட்டாரங்களில் நடக்கும் மர்ம மரணங்களை தோண்டித் துருவிட உத்தரவிட்டுள்ளது.  

ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்தான் அண்ணாநகர் ரமேஷ். இளமை மிடுக்குடன், பொலிவான அரசியல்வாதியாக ஸ்டாலின் வலம் வந்த காலத்தில் அவரது நிழலாக பின் நின்ற மனிதர். ஸ்டாலினின் பிஸ்னஸ், வருமானம், முதலீடுகள் குறித்த தகவல்களை முழுமையாக அறிந்திருந்த மனிதர். இவர் திடீரென தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். இந்த மரணத்தின் பின்னணியில் ஸ்டாலினையும் தொடர்பு படுத்து அப்போதே பேச்சு எழுந்து அடங்கியது. 

இப்போது இதை  தோண்டத்துவங்கியுள்ளனர் மீண்டும். டெல்டா மற்றும் தென் தமிழக வட்டாரங்களில் ரமேஷின் உறவினர் வட்டராங்களில் விசாரித்து, ஏதாவது துப்பு அல்லது புகார் கிடைக்குமா என்று அலசுகிறது ஒரு போலீஸ் டீம். அதேபோல், சென்னையை சேர்ந்த தி.மு.க. மகளிர் அணி பெண்ணான பால் மலர் என்பவர் பத்து ஆண்டுகளுக்கு முன் கொடூரமாக கொல்லப்பட்டார். அந்த வழக்கையும் தூசு தட்டுகிறது இன்னொரு போலீஸ் டீம்.

அதேபோல் ராசாவுக்கு செக் வைப்பதற்காக, அவரது நண்பராகவும், பிஸ்னஸை கவனிக்கும் தொழில் அதிபராகவும், எல்லாமுமாக இருந்தவரான சாதிக்பாட்ஷாவின் மர்ம மரண விவகாரத்தை வேறொரு போலீஸ் டீம் துருவி எடுக்க துவங்கியுள்ளது மறுபடியும். சமீப காலங்களில் ஆ.ராசா யாருக்கெல்லாம் பெரிய அளவில் நிதியுதவி செய்தார், அவருக்கும் ராசாவுக்கும் என்ன நட்பு? என்றெல்லாம் போகிறது அந்த விசாரணையின் வேர்.

 

பழைய மர்ம மரணங்களை விசாரிக்கும் இந்த வேகம் யோசனைக்கு அப்பாற்பட்டு பறந்து கொண்டிருக்கிறது. மூன்று வழக்கிலோ அல்லது இது தொடர்பான வேறு விவகாரங்களிலோ ஸ்டாலின் மற்றும் ராசாவை சிக்க வைத்து, தேர்தல் நடைபெறு நேரத்தில் அவர்கள் பிரதான அரசியலிலும் இருக்க கூடாது, பிரசாரத்துக்கு வரும் நிலையிலும் இருந்திட கூடாது! என்பதே அதிகார மையம் ஒன்றின் இலக்காக உள்ளதாம். இவை அனைத்தையும் அறிந்தும் ஸ்டாலின் மற்றும் ராசா இருவரும் கூல் ஆக இருக்கிறார்களாம். ஆக அந்த மர்ம மரண பிணங்களின் எச்சங்கள் அதிகார மையத்துக்கு கை கொடுக்குமா அல்லது காலை வாருமா? என்பதே இப்போதைய ஹாட் டாபிக்.

click me!