முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பண்ணனுக்கு முக்கிய பொறுப்பு.. தெறிக்கவிட்ட ஓபிஎஸ், இபிஎஸ்.

By Ezhilarasan BabuFirst Published Jul 21, 2021, 5:37 PM IST
Highlights

அடிப்படையில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழகம் மாவட்டச் செயலாளராக  முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர், ஏ.கே செங்கோட்டையன் அவர்களும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் மாவட்ட செயலாளராக  முன்னாள் அமைச்சர், கே. சி கருப்பண்ணன் எம்எல்ஏ  ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். 

முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பண்ணன் ஆகியோரை மாவட்ட செயலாளர்களாக நியமித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். அதிமுக கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவி பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. 60க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ள நிலையில், வலுவான எதிர்க்கட்சி ஆகவே அது உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக படுதோல்வி அடைந்து விடும் என பலரும் விமர்சித்து வந்த நிலையில் அது தனக்கான மக்கள் செல்வாக்கை நிரூபித்துள்ளது.

இந்நிலையில் அடுத்தடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் அதிமுக தற்போதே தயாராகிவருகிறது அந்த வகையில் நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்களை உருவாக்குவது, அதற்கான புதிய நிர்வாகிகளை நியமிப்பது என தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மறுபுறம் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படுவோரை கண்டறிந்து அவர்களை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த  பரபரப்புகளுக்கு மத்தியில் புதிய அறிவிப்பு ஒன்றை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதாவது ஈரோடு புறநகர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து அதற்கான மாவட்ட செயலாளர்களை நியமித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:- 

கழக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு, ஈரோடு புறநகர் மாவட்டம் என செயல்பட்டு வரும் மாவட்ட கழக அமைப்பு இன்று முதல் கழக அமைப்பு ரீதியாக ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு கீழ்கண்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும்.

 ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்:

1. பவானி சட்டமன்ற தொகுதி (104)

2. பெருந்துறை சட்டமன்ற தொகுதி (103) 

 
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்:

1.  கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி (106)

2.  அந்தியூர் சட்டமன்ற தொகுதி (105)

3. பவானிசாகர் தனி சட்டமன்ற தொகுதி (107) 

அடிப்படையில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழகம் மாவட்டச் செயலாளராக  முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர், ஏ.கே செங்கோட்டையன் அவர்களும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் மாவட்ட செயலாளராக  முன்னாள் அமைச்சர், கே. சி கருப்பண்ணன் எம்எல்ஏ  ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். கழக அமைப்பு ரீதியாக தற்போது நியமிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கழகப் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்கள் மாவட்ட அளவில் திருத்தி அமைக்கப்பட்ட கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை தற்போதுள்ள நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். என அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!