மானாவாரியா சொத்துக்களை வளைத்துப் போட்ட அதிமுக முன்னாள் மந்திரி... 5 வருஷம் கலி,கம்பி! பொண்டாட்டிக்கு 2 வருஷம்!

First Published Jun 6, 2018, 1:34 PM IST
Highlights
Former minister is jailed for 5 years


சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக  முன்னாள் மந்திரி  சத்தியமூர்த்திக்கு 5ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மனைவி சந்திராவுக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனையும்  விதித்து தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம் .

கடந்த 1991-96 அதிமுக ஆட்சியில்  வணிக வரித் துறை மந்திரியாக இருந்தவர் கடலாடி சத்தியமூர்த்தி. மந்திரியாக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.82.32 லட்சம் சொத்து சேர்த்ததாக சத்தியமூர்த்தி மீது லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 1997ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் மந்திரி மற்றும் அவரது மனைவி சந்திராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி 2001ஆம் ஆண்டு இருவரையும் விடுதலை செய்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன், இருவருக்கும் எதிரான சொத்துக்களை விசாரணை நீதிமன்றம் சரியாக மதிப்பீடு செய்யவில்லை எனக்கூறி இருவரையும் விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

"முன்னாள் மந்திரி சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது" என்றும் உத்தரவிட்டார். இருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளோம். உடல்நிலை மற்றும் வயதைக் கருத்தில் கொண்டு சரணடைய அவகாசம் அளிக்க வேண்டும் என முன்னாள் மந்திரி  சத்தியமூர்த்தி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையையும்  நீதிபதி நிராகரித்துவிட்டார்.

click me!