உள்ளாட்சி தேர்தலை ஒழுங்கா நடத்தல... மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை..!

By Asianet TamilFirst Published Oct 4, 2021, 9:00 PM IST
Highlights

உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தவில்லை என்றால் அதிமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், “விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும். இந்த நோக்கத்தோடு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் சில கோரிக்கைகளை மனுவாக அளித்திருந்தார். இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால், தேர்தல் ஆணையம் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. அதனால்தான் அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் செப்டம்பர் 30 அன்று உயர் நீதிமன்றம், “தமிழகம் முன்னணி மாநிலம். இங்கு ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் எந்தக் குறைபாடும் ஏற்படக் கூடாது. மாநிலத் தேர்தல் ஆணையம்  நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும். பிரதான எதிர்க்கட்சி அதிமுக அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”' என உத்தரவிட்டது.
இதனையத்து மாநிலத் தேர்தல் ஆணையம் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனு மீது உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. தேர்தலை நியாயமாக சுதந்திரமாக நடத்த அனைத்துப் பகுதிகளிலும் வாக்கு எண்ணி முடிகிற வரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கைகள் பதிவு செய்யப்பட வேண்டும் உள்பட பல்வேறு செயல்பாடுகளை மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவாகத் தெரிவித்தது. மாநிலத் தேர்தல் ஆணையம் இவை அனைத்தையும் செய்வோம் என்றும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.
ஆனால், இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் திமுக மாவட்டச் செயலாளர்கள் போலவே செயல்படுகிறார்கள். எனவே, இந்தத் தேர்தலை நியாயமாக, நேர்மையாக நடத்தவில்லை என்றால், அதிமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும்” என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
 

click me!