
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அச்சுறுத்தலும் இல்லை என மத்திய மாநில உளவுத்துறை அறிக்கைகள் அறிக்கை அளித்ததன் அடிப்படையிலேயே போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
.
சி.வி.சண்முகம் மனுத்தாக்கல்
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நாளில், வீட்டின் முன் சகோதரர்கள், மைத்துனருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது ஒரு கும்பல் தன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் தனது மைத்துனர் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதன் பின் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், தனது துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்து தரவில்லை எனவும் கூறியிருந்தார்.
இதையும் படிங்க;- சி.வி.சண்முகம் பியூஸ் போன பல்பு என போட்டு தாக்கிய அதிமுக நிர்வாகிகள்.. அதிரடியாக நீக்கிய ஓபிஎஸ், இபிஎஸ்..!
பாதுகாப்பு விலக்கியதற்கான காரணம்
தற்போது அந்த வழக்கு சாட்சி விசாரணை கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டதாகவும், அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். பாதுகாப்பை விலக்கியதற்கான காரணத்தை கூறக் கோரியும், பாதுகாப்பு வழங்கக் கோரியும் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இருவாரங்கள் ஒத்திவைப்பு
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த நவம்பர் மாதம் சி.வி.சண்முகத்துக்கான பாதுகாப்பை மறு ஆய்வு செய்த போது, அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பது தெரிய வந்ததாகவும், மத்திய - மாநில உளவுப் பிரிவினரும், அவருக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என தெரிவித்ததாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சி.வி.சண்முகத்தின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டதற்கான காரணத்தை இரு வாரங்களில் அவருக்கு வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.