
மக்கள் மற்றும் தொண்டர்களின் எண்ணப்படி தனது முடிவு இருக்கும் எனவும், இன்றைய அரசியல் சூழ்நிலைகளை கவனித்து வருவதாகவும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
அவருக்கே கட்சியில் பதவி இல்லை. அவரது அறிவிப்பு அதிமுகவை கட்டுப்படுத்தாது. தினகரனை அதிமுகவில் நியமனம் செய்ததே சட்டவிரோதம்.
கடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதாவால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி.தினகரனுக்கு அதிமுகவில் எந்த அதிகாரமும் இல்லை என தீர்மானம் நிறைவேற்றி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய ஒபிஎஸ் அணியின் கே.பி.முனுசாமி, இப்போதுதான் எடப்பாடி பழனிசாமி அணியினர் விழித்துள்ளார்கள். தினகரனோடு சசிகலா குடும்பத்தினர் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று மீண்டும் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், மக்கள் மற்றும் தொண்டர்களின் எண்ணப்படி தனது முடிவு இருக்கும் எனவும், இன்றைய அரசியல் சூழ்நிலைகளை கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.