'சுத்துபோடும்' சிக்கல்கள்.. சிக்குவாரா எடப்பாடி... கொங்கு ஈஸ்வரன் சூசகம்…

By Raghupati R  |  First Published Nov 29, 2021, 12:46 PM IST

நான்கு பக்கமும் வரும் அச்சறுத்தல்களால் மிகுந்த தலைவலியில் இருக்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் மேல் சிக்கல் எழுந்த வண்ணம் உள்ளது. கட்சிக்குள் ஓபிஎஸ் ஒரு பக்கம் தனது இருப்பை காட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சசிகலாவின் அரசியல் ரீ என்ட்ரி கொடுக்கும் அழுத்தமும், ஆளுங்கட்சியாக திமுக தரும் அழுத்தமும் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை உருவாக்கி வருகிறது. சிக்கலை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், பெரிய தலைவலியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Latest Videos

undefined

‘கொங்கு மண்டலம்’ அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றதற்கு முக்கிய காரணம் ‘கொங்கு’ மண்டலத்தில் பெற்ற வெற்றியே. இந்த முறை பலமான எதிர்க்கட்சியாக அதிமுக உட்கார்ந்திருப்பதற்கும் முக்கிய காரணமும், கொங்கு மண்டலமே. இப்படி அதிமுகவின் பலமான கோட்டையாக இருக்கும் கொங்கு மண்டலத்தை, கைப்பற்றுவதே திமுக தலைமையின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. 

கொங்கு மண்டலத்தில் கடந்த முறை 6 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர்.இருப்பினும், கொங்கு மண்டலத்தை  பொறுத்தவரை மூன்று பேர் முக்கியமானவர்கள். ஒன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இரண்டாவது எஸ்.பி.வேலுமணி, மூன்றாவது பி.தங்கமணி. இந்த மூவரும் தான் கொங்கு மண்டலத்தின் முகமாக பார்க்கப்படுகிறார்கள். விரைவில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தை கைப்பற்ற வேண்டும் என்று திமுக தலைமை மிகுந்த சிரத்தை எடுத்து வேலை செய்து வருகிறது.

குறிப்பாக கோவை மாவட்டத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, சேலத்துக்கு கே.என்.நேருவையும் நியமித்திருக்கிறது. ஆட்சிக்கு வந்த பின் வரிசையாக எதிர்க்கட்சியான அதிமுக முக்கிய நிர்வாகிகள் மீது தொடர்ந்து ‘லஞ்ச ஒழிப்புத்துறை’ சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.பி.வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிசாமியுடன் நெருங்கிய நண்பரான இளங்கோவன் வீடு மற்றும் அலுவலகம் என பரபர சோதனை நடைபெற்றது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் என இந்த சோதனை நீண்டுகொண்டே வருகிறது. இதில் இன்னும் சோதனைக்கு உள்ளாக்கப்படாதவர் தங்கமணி மட்டுமே. இந்த தொடர் சோதனைகள் ஒருபக்கம் தலைவலியை ஏற்படுத்தினாலும், கொடநாடு கொலை வழக்கில் சேர்க்கப்பட்டு விடுவோமோ ? என்ற கேள்வி எடப்பாடி பழனிசாமியை நெருக்கடிக்குள் தள்ளி இருக்கிறது.

ஆரம்பம் முதலே எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அந்த கோணத்தில் விசாரணைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவரான கூட்டுறவு இளங்கோவன் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என இரு மாதங்களுக்கு முன்னரே தகவல் வெளியாகி வந்தது.இந்த வழக்குக்குள் எப்படியும் எடப்பாடி கொண்டுவரப்படுவார், முகாந்திரம் இருந்தால் அவரை கைது செய்ய தயக்கம் காட்ட வேண்டாம் என்றும் மேலிடத்திலிருந்து உத்தரவுகள் வருகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த விஷயம் ஒருபக்கம் இருக்க, தான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று கடந்த வாரம் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடத்தில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக இருந்தவர் நடுப்பட்டி மணி என்கிற மணி. எடப்பாடி பழனிசாமியுடன் இருந்த நெருக்கத்தை காரணம் காட்டி பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வசூலித்து ஏமாற்றினார் என்ற புகாரில் கைது ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது அதிமுக வட்டாரத்தில் மேலும்  சசலப்பை ஏற்படுத்தியது.கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் பேசிய ஈஸ்வரன், ‘கடந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் முறைகேடு நடந்துள்ளது. காவல்துறை இதற்காக நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறது. கைது செய்யப்பட வேண்டியவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள்’ என்று கூறினார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, அவரது சமூகத்தை சேர்ந்த ஒரு கட்சி தலைவரையே வைத்து இப்படி பேசவைத்திருக்கிறது திமுக தலைமை.இந்த செய்தி கொங்கு மண்டலம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுவெல்லாம் எடப்பாடி பழனிசாமியை நெருக்குவதற்கான அறிகுறியோ ? விரைவில் கைது செய்யப்படுவாரா ?  என்ற முணுமுணுப்பு அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டிருக்கிறது.

click me!