
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி மு.க.அழகிரி பேசியது குறித்து பதில் சொல்ல எனக்கு விருப்பமில்லை என்று திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி, உள்ளிட்ட 14 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சிபிஐ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
ஆ.ராசா, கனிமொழி எம்.பி. விடுவிக்கப்பட்டதை அடுத்து திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். 2ஜி வழக்கு குறித்து ஆ.ராசா புத்தகம் ஒன்றை எழுதி கொண்டிருக்கிறார். இந்த நிலையில், ஆ.ராசா, பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.
2ஜி வழக்கில் 7 வருடங்களுக்குப் பிறகு உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளிவந்துள்ளது குறித்து ஆ.ராசாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், திமுகவின் தேர்தல் தோல்விகளுக்கு 2ஜி வழக்கும் ஒரு காரணம். வழக்கின் தீர்ப்பு எங்களின் பலமாக மாறும் என்றார்.
நான் அமைச்சராவதற்கு முன்பே 2ஜி அலைக்கற்றை இருந்தது. எனினும் அது சாமானிய மனிதர்களால் பயன்படுத்தப்படும் அளவுக்கு எளிமையாகவும் விலை குறைவாகவும் இல்லை. அந்த நிலையை நாங்கள் மாற்றினோம். ஆனாலும் நான் குற்றவாளியாக முத்திரை குத்தப்பட்டேன் என்றார். 3ஜி, 4ஜி அலைக்கற்றைகளின் அறிமுகத்துக்கும் நாங்களே காரணமாக இருந்தோம் என்றார். மேலும், தற்போது நான் எழுதி வரும் புத்தகத்தில் இது தொடர்பான விரிவான விளக்கங்கள் இடம் பெறும் என்றும் ஆ.ராசா கூறினார்.
அண்மையில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் தோல்வி குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆ.ராசா, கட்சி மேலிடம் அமைத்துள்ள குழு, இது பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றார். அதற்கு முன்னதாக தோல்வி குறித்து கருத்து சொல்வது சரியல்ல என்றும் அவர் தெரவித்தார். மு.க.ஸ்டாலின் குறித்து மு.க.அழகிரியின் கருத்து குறித்து பதிலளித்த அவர், கட்சியின் தலைமையைத்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றும், இதற்கு
பதில் சொல்ல எனக்கு விருப்பமில்லை என்றும் ஆ.ராசா கூறினார்.