
மன்னார்குடியை சேர்ந்தவர் குமார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னை மயிலாப்பூரில் வீடு வாங்கினார். ஆனால், அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யவில்லை. இதையடுத்து வழக்கறிஞர் ஒருவர் மூலம் காமராஜ் அறிமுகம் ஆனார். அப்போது, வீட்டை காலி செய்ய ரூ.30 லட்சம் அவர் பெற்றுள்ளார்.
அதற்குள் சட்டமன்ற பொது தேர்தல் வந்தது. அதில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காமராஜ், உணவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதற்கிடையில், அரசியலில் ஈடுபட்டதால், குமாருக்கு வீடு காலி செய்து தரும் வேலையை அப்படியே விட்டுவிட்டார்.
இதனால், குமார் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது, அவர் மறுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மன்னார் குடி டிஎஸ்பி அறிவானந்தத்திடம் புகார் செய்தார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் குமார் வழக்கு தொடர்ந்தார். ஆனால், நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அமைச்சர் காமராஜ், குமாருக்கு பணத்தை திருப்பி தருவதாக கூறினார். ஆனால் இதுவரை ரூ.30 லட்சம் தரவில்லை.
இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரமணா, புகார் கூறப்பட்ட அமைச்சர் காமராஜ் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார். மேலும், அமைச்சர் காமராஜ் மீது, தமிழக அரசு வழக்குப்பதிவு செய்யுமா அல்லது உச்சநீதிமன்றம் உத்தரவிடவேண்டுமா என கேள்வி எழுப்பினர்.
இதை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன் தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படடது. அதில், காமராஜ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. அவர் மீது வழக்குப்பதிவு செய்தால், மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதை கேட்டு ஆத்திரமடைந்த நீதிபதி, தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். இந்த வழக்கில் அடிப்படை முகாந்திரம் உள்ளது. ரூ.30 லட்சம் பணத்தை பெற்று கொண்டு அவர் மோசடியில் ஈடுபட்டது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை.
அமைச்சராக இருந்தால், சட்டவிதிகளுக்கு உட்பட முடியாதா. ஆக்கிரமிப்பாளர்களை காலி செய்து தருவதாக கூறி பணத்தை பெற்ற மோசடி செய்தது நிரூபனமாகவே தெரியவந்துள்ளது.
அவர் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், உச்சநீதிமன்றம் காவல்துறைக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் என எச்சரித்தனர். மேலும், இந்த வழக்கை வரும் செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி மன்னார்குடி போலீசார், அமைச்சர் காமராஜ் மீது மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.