
’லேட்டாக வந்தாலும் ஹாட்டஸ்டாவும், லேட்டஸ்டாவும் அமித்ஷாஜி வருவார்.’ என்று தள்ளிப்போனதற்கான காரணத்தை பில்ட் அப் கொடுத்து சொல்கிறது தமிழக பா.ஜ.க.
சமீப தேர்தல்கள் வரை மாயமானாகதான் தமிழக அரசியலில் வலம் வந்தார் அமித்ஷா. ஜெயலலிதா எனும் பேராளுமை தமிழக அரசியலில் நிறைந்து நிற்கையில் அதை மீறி பா.ஜ.க.வால் தடம் பதித்திட முடியுமா? என்கிற சந்தேகம் அவருக்கு இருந்தது. அப்படியானால் ஜெயலலிதாவை பார்த்து அமித்ஷா பயந்தாரா? என்று அனத்தமாக கேள்வி கேட்கப்படாது.
அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் அது திராவிடத்தன்மை தாங்கிய இந்து இயக்கம். தி.மு.க. போல் சிறுபான்மை வாக்கு வங்கிக்காக இந்துக்களை பழிக்கும் போலி நாத்திகத்தன்மை அ.தி.மு.க.விடம் இருந்ததில்லை.
பெரியாரின் அரசியல் கொள்கைகளுக்கு அண்ணா கொடுத்த புதிய வடிவத்தை நாத்திக சாயம் பூசாமல் எம்.ஜி.ஆர். கடத்தி வந்தார், ஜெயலலிதாவும் அதில் தெளிவாக இருந்ததோடு மட்டுமில்லாமல் எல்லா மத வாக்குவங்கியிலும் தனக்கான ஆதரவு பங்கினை தெளிவாக மெயின்டெய்ன் செய்தார்.
அ.தி.மு.க.வின் தொடர் வெற்றிக்கு இந்த சாமர்த்தியமும் முக்கிய காரணம்! இதுதான் அமித்ஷாவை சிந்திக்க வைத்தது.
அமித்ஷாவால் ஜெ.,வை இந்துக்களின் எதிரி என்று சொல்லிக் காட்டி தன் கட்சியை வளர்க்கவும் முடியவில்லை! அதேநேரத்தில் சிறுபான்மையினர் ஒட்டுமொத்தமாக ஜெயலலிதாவை புறக்கணிக்கவுமில்லை.
அதனால்தான் ஜெயலலிதாவுக்கு எதிராக காவிப்படையை திரட்டி அரசியல் போரில் முட்டி மோதிப்பார்த்துவிட தயங்கினார் அமித்ஷா. ஜெயலலிதா தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த நிலையில் பா.ஜ.க.விடமிருந்த ஒரே ஆப்ஷன், அ.தி.மு.க.வோடு கூட்டணி போட்டு முடிந்தளவிலான தொகுதிகளை வெல்வது என்பதுதான்.
ஆனாலும் கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களின் போது ஜெயலலிதா அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் போனது அமித்ஷாவை அதிர்ச்சியடைய வைத்தது என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க.வை மறைமுகமாக ஆட்டிப்படைக்கும் பா.ஜ.க. பைபாஸ் வழியில் தமிழகத்தில் காலூன்ற துடிக்கிறது எனும் விமர்சனம் வெகுவாக எழுந்திருக்கிறது. பா.ஜ.க. அந்த முயற்சியை செய்வது உண்மையோ அல்லது பொய்யோ அது தனி கதை.
ஆனால் தமிழகத்தில் தாங்கள் நேரடியாகவே அரசியல் பலத்தை காட்டி வெற்றிகளை பதிவு செய்திட வேண்டும் என்று அமித்ஷா காண்பிக்க நினைக்கிறார். அதனால்தான் மாயமான் போல இத்தனை நாள் தமிழக அரசியலில் மறைந்து உலவியவர், இப்போது வெளிப்படையாக களமிறங்க முனைந்துள்ளார்.
‘ப்ராஸ்பர் தமிழ்நாடு’ (வளமான தமிழகம்) என்ற தலைப்பில் அமித்ஷா தன் பரிவாரத்துடன் தமிழகத்தில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டதன் உள்நோக்கம் இதுதான்.
ஏற்கனவே திட்டமிட்டபடியான நாளில் அமித்ஷா வரவில்லைதான்.
ஆனால் கூடிய விரைவில் அவர் வரும்போது வைபரெண்டாக வருவார் என்பது நிச்சயம். அவர் தமிழகத்தில் நிகழ்வொன்றை நடத்துகிறார் என்றால் தமிழகத்தில் ஏதோ ஒரு தேர்தலுக்கான திரி கிள்ளப்படுகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
எனவே இனி தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் வெறும் வாய்ஜாலத்தின் மூலம் அரசியல் காலத்தை ஓட்ட முடியாது. ஜெயலலிதா எனும் பேராளுமை இல்லாத தைரியத்தில் தார்க்குச்சியை கையிலெடுக்கும் அமித்ஷா அரசியலில் அல்லு கிளப்புவார் என்றே தெரிகிறது.
இதை தி.மு.க. எவ்வாறு எதிர்கொள்ள போகிறது என்பதுதான் மேட்டரே!