பஞ்சாப்பை பார்த்து கத்துக்கோங்க... தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!!

Published : Mar 20, 2022, 07:20 PM IST
பஞ்சாப்பை பார்த்து கத்துக்கோங்க... தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!!

சுருக்கம்

பஞ்சாப்பில் 25 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்க முடிவு செய்துள்ள நிலையில் தமிழகத்தில் 1 லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

பஞ்சாப்பில் 25 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்க முடிவு செய்துள்ள நிலையில் தமிழகத்தில் 1 லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பகவந்த்சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், இளைஞர்களுக்கு 25 ஆயிரம் அரசு வேலைகளை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இளைஞர்களின் இன்றைய தலையாயத் தேவை என்ன என்பதை உணர்ந்து, அதை வழங்க பஞ்சாப் அரசு முடிவு செய்திருப்பது பாராட்டப்பட வேண்டியது என்பதில் ஐயமில்லை.

பஞ்சாப் மாநிலத்துடன் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான தேவை மிகவும் அதிகமாகவே உள்ளது. வேலை வழங்குவதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் பஞ்சாபை விட தமிழக அரசிடம் அதிகமாக உள்ளன. ஆட்சிக்கு வந்தால், அரசுத் துறைகளில் காலியாகவுள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், 2 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்திருந்ததால், அதை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது. தமிழ்நாட்டிற்கு இன்றைய நிலையில் 5.60 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. அதே நேரத்தில் பஞ்சாபின் கடன் சுமை 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.

பொருளாதார மதிப்பின் அடிப்படையில் ஒப்பிடும் போது பஞ்சாப் மாநிலத்தின் கடன் சுமை மிகவும் அதிகம் ஆகும். இதை வைத்துப் பார்க்கும் போது தமிழ்நாட்டின் பொருளாதாரச் சூழலில் ஒரு லட்சம் பேருக்காவது அரசு வேலைகளை வழங்க முடியும். எனவே, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் முடக்கி வைக்கப்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புதல், புதிய பணியிடங்களை உருவாக்கி நிரப்புதல் என நடப்பாண்டில் குறைந்தது ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலைகளை வழங்குவதற்கான அறிவிப்பை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்
விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!