உத்தரப்பிரதேசத்தி்ல் 300 விவசாயிகள் மீது திடீர் வழக்குப்பதிவு: ஏன் தெரியுமா?

By Selvanayagam PFirst Published Nov 2, 2019, 9:23 AM IST
Highlights

காற்று மாசு ஏற்படுத்தும் வகையில் அறுவடைக்கு பிறகு நிலத்தில் காய்ந்த சருகுகளை எரித்ததாக உத்தர பிரதேசத்தில் 300 விவசாயிகள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

தலைநகர் டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே இதுவரை இல்லாத அளவு காற்று மாசு ஏற்பட்டு பெரும் பாதிப்பு உருவாகி வருகிறது. டெல்லியை சுற்றியுள்ள உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லைப்புற பகுதி விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடைக்கு பிறகு காய்ந்த சருகுகளை எரிப்பதால் பெருமளவு காற்று மாசு ஏற்படுகிறது. இதையடுத்து விவசாயிகள் நிலத்தில் சருகுகளை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசு இந்த ஆண்டில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையை தொட்டு, 500 புள்ளிகளுக்கும் மேல் சென்று நெருக்கடி நிலையை எட்டியுள்ளது. மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

காற்று மாசு குறியீ்ட்டின் அளவு உச்ச பட்சமாக நள்ளிரவு 12.30 மணி அளவில் 582 புள்ளிகளைத் தொட்டது. இந்த ஆண்டில் முதல்முறையாக இதுபோன்ற மோசமான, நெருக்கடியான நிலையை அடைந்தது. ஆனால், இன்று காலை நிலவரப்படி காற்று மாசின் அளவு 459 புள்ளிகளை எட்டியுள்ளது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம் வரும 5-ம் தேதிவரை டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் கட்டிடப்பணிகளில் ஈடுபட தடைவிதித்துள்ளது. பள்ளிகளுக்கு வரும் 5-ம் தேதிவரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் உத்தர பிரதேச மாநிலம் பிலிபட்டில் தங்கள் நிலத்தில் காய்ந்த சருகுகளை எரித்த 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தர பிரதேச போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதை ஏற்று அவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பில்சாண்டா, நெரியா, அமரியா, புரண்பூர், செராமு, மதகோண்டா, ஜகனாபாத், பிலாஸ்பூர், காஜூரூலா உள்ளிட்ட இடங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது சருகுகளை எரித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிலிபட்டை சேர்ந்த விவசாயி சரண்ஜித் சிங் கூறுகையில் ‘‘இங்குள்ள விவசாயிகள் அனைவரும் நெல்லை விற்றுவிட்டு அதற்குரிய தொகை கிடைக்காமல் உள்ளனர். பயிர் செய்ததற்கான கடனையும் அடைக்க முடியவில்லை. இந்த சமயத்தில் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எதிர்த்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்’’ எனக் கூறினார்.

click me!