
தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை, தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்கிறார். தமிழகத்தின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டது. அதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 11:30மணியளவில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக் காலத்தில் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகைகள், எந்தெந்த வழிகளில் அவை செலவிடப்பட்டன, கூடுதல் செலவுகள், தற்போதைய நிதிநிலைகள், கடன்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையில், 2011ம் ஆண்டில் இருந்த நிதி நிலையும், தற்போது உள்ள நிதி நிலையும் ஒப்பிட்டுக் காட்டப்படுவதோடு, 2011ம் ஆண்டு திமுக ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகிய போது, தமிழகத்தின் 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மொத்த கடன் அளவு, கடந்த 10 ஆண்டுகளில் 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எனவே, இதுத்தொடர்பான விரிவான விவரங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், ஏற்கெனவே வாங்கிய சுமார் ரூ.4.85 லட்சம் கோடி கடனுக்காக, ஆண்டுக்கு அரசு சுமார் 50,000 கோடி ரூபாயைக் வட்டியாகக் கட்டிவரும் நிலையில், கடன் சுமை அதிகரிப்பதன் காரணம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும் என்றும், அதிமுக அரசு கடன்களை எதற்கு வாங்கினார்கள், எப்போது வாங்கினார்கள், அதன் பயன்பாட்டு விவரங்கள் என்ன என்பதை இந்த விரிவான தகவல் வெள்ளை அறிக்கை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
அதோடு, கொரோனா பெருந்தொற்றால், அரசுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் சுமை, அரசு செய்துள்ள செலவுகள் என்ன, கூடுதல் தொகை செலவிடப்பட்டுள்ளதா என்பது பற்றியும், தமிழக அரசின் நிதிநிலை தவிர பிற துறைகளான போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை ஆகியவற்றின் நிதி நிலை பற்றிய அறிவிப்புகளும் வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேப்போல், நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 13ம் தேதி கூட உள்ள நிலையில், இன்று வெளியிடப்படும் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் கடுமையான விவாதங்களைக் கிளப்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கு முன், கடந்த 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சராக இருந்த பொன்னையன், நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது, நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், அதன் மூலம் கிட்டத்தட்ட 30,000 முதல் 40,000 கோடி வரை பணம் வெளிப்படைத்தன்மை இன்றி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான கணக்கு வழக்குகள் சாரியான எல்லை என்று முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் என்ன மாதிரியான முறைகேடுகள் கடந்த ஆட்சியில் நடைபெற்றது என்பதையும் விரிவாக விவரிக்கும் வகையிலான தாவல்கள் இந்த வெள்ளை அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் என கூறப்படுவதால், அதிமுக மாஜி அமைச்சர்கள் குறிப்பாக ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் கலக்கம் அடைந்துள்ளனர்.