நான் சபரிமலைக்கு போயே தீருவேன் …அடம் பிடிக்கும் பெண்ணியவாதி திருப்தி தேசாய்….

By Selvanayagam PFirst Published Nov 14, 2018, 10:29 PM IST
Highlights

அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து வரும் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இருப்பதாகவும், அதனால்  பாதுகாப்பு கேட்டு கேரள முதலமைச்சர்  பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் பெண்ணியவாதி  திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார். எத்தனை எதிர்ப்பு வந்தாலும் சபரிமலை போயே தீருவேன் என அவர் கூறியுள்ளார்.

மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்ஹாவில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதைக் கையில் எடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பூமாதா பிரிகேட் அமைப்பின் தலைவர் திருப்தி தேசாய் அதில் வெற்றி பெற்றார். அனைத்துப் பெண்களும் தர்ஹாவுக்குள் நுழைவதற்கு அனுமதி பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுப் பெண்கள் வரை சாமி தரிசனம் செய்ய நூற்றாண்டுகளாகத் தடை இருந்தது. இந்தத் தடையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த இளம் வழங்கறிஞர்கள் அமைப்புடன் சேர்ந்து செயல்பட்டவர் திருப்தி தேசாய்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என தெரிவித்தது.

ஆனால், இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கேரளாவில் பல்வேறு நகரங்களில் பேரணிகள், போராட்டங்கள் தொடர்ந்து தற்போது வரை நடந்து வருகின்றன.

இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரித் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த உச்ச நீதிமன்றம், பெண்கள் கோயிலுக்கு செல்வதற்கு தடைவிதிக்க முடியாது என கூறிவிட்டது.

இந்நிலையில், திருப்தி தேசாய் வரும் 17-ம் தேதி சபரிமலைக்கு வருவதை அவர் இன்று உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ள திருப்தி தேசாய், வரும் 16-ம் தேதி நான் உள்ளிட்ட 5 பெண்கள் கேரளாவுக்கு வருகிறோம் என்றும், 17-ம் தேதி சபரிமலை கோயிலுக்கு சாமிதரிசனம் செய்யப்போகிறோம். நாங்கள் சாமி தரிசனம் முடிந்து கேரளாவில் இருந்து செல்லும் வரை தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கோவிலுக்குள் செல்ல எங்களை யாரும் தடுக்க முடியாது என்றும், எந்த எதிர்ப்புகள் வந்தாலும் கோயிலுக்குச் செல்வோம் என்றும் திருப்தி தேசாய் கூறியுள்ளார்.

இந்நிலையில், மண்டல பூஜைக்காக வரும் வெள்ளிக்கிழமை சபரிமலை ஐயப்பயன் கோயில் நடை திறக்கப்படுகிறது. அதன்பின் 2019-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.

click me!