மாத சம்பளம் வாங்கும் எம்எல்ஏக்கள், எம்.பி.க்களால் எப்படி புதிய தொலைக்காட்சி தொடங்க முடிகிறது ? நியூஸ் ஜெ டிவியை சரமாரியாக தாக்கிய விஷால் ….

By Selvanayagam PFirst Published Nov 14, 2018, 9:38 PM IST
Highlights

அதிமுக சார்பில் இன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ள நியூஸ் ஜெ புதிய தொலைக்காட்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஷால், வெறும் மாதச் சம்பளம் மட்டுமே வாங்கும் எம்எல்ஏக்கள், எம்.பி.க்களால் எப்படி தொலைக்காட்சி தொடங்க முடிகிறது ? அதற்கு அவர்களுக்கு எப்படி பணம் வந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்காக செயல்பட்டு வந்த ஜெயா டிவி, டிடிவி தினகரன் ஆதரவாக மாறியது. இதே போல் நமது எம்.ஜிஆர்  நாளிதழும் தினகரன் கைவசம் சென்றது. இதையடுத்து இபிஎஸ் – ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் அதிமுகவுக்கென நமது அம்மா என்ற நாளிதழ் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுகவுக்கென புதிய தொலைக்காட்சி ஒன்றும் நிறுவப்பட்டது. இதன் ஒளிபரப்பு இன்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில்  நடைபெற்றது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் எம்.ஜி.ஆர்.. ஜெயலதா ஆகியோரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்பந்து நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் ஒளிபரப்பை அவர்கள் இருவரும் தொடங்கி வைத்தனர்.

.இந்த நிலையில் இந்த புதிய சேனல் குறித்து நடிகர் விஷால் தனது டுவிட்டரில் பக்கத்தில்  'இன்று முதல் மற்றுமொரு செய்தி சேனல் தொடங்கப்பட்டுள்ளது.அபாரம். ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மாத சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் எப்படி இது போன்ற ஒரு வியாபார அமைப்பை தொடங்க முடிகிறது? 2019-க்காக காத்திருக்கின்றேன்" என்று மறைமுகமாக நியூஸ் ஜெ தொலைக்காட்சியை தாக்கி விமர்சனம் செய்துள்ளார்.

ஏற்கனவே 'சர்கார்' விவகாரத்தில் நடிகர்கள் மீது கடுப்பில் அதிமுக இருக்கும் நிலையில் விஷாலின் இந்த டுவிட்டர் பதிவு மேலும் ஆத்திரத்தை கிளப்பும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!