
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு எப்படியாவது முதலமைச்சாராக வேண்டும் என முட்டி மோதினார்.
ஆனால் ஓ.பி.எஸ் தரப்பில் போடப்பட்ட முட்டுக்கட்டைகளால் அது நடக்கவில்லை. இதையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டு தண்டனை உறுதிபடுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர், இன்று திடீரென ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவி ஏற்க அனுமதி கொடுத்து 15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார்.
பதவி ஏற்றபின்னர், செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதாவின் ஆட்சி தொடரும் எனவும் விரைவில் சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிப்போம் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், வரும் பிப். 18 ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று காலை 11-00 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சி தொடர பெரும்பான்மையை நிருபிக்க உள்ளார்.
அதற்கான முழு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
18 ஆம் தேதி அன்று பெரும்பான்மையை நிருபிக்க சபாநாயகர் முன்பு எடப்பாடி உரிமை கோருவார். கட்சி கொறடா உத்தரவுப்படி எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்.
இதில் 118 எம்.எல்.ஏக்களை எடப்பாடி தனக்கு ஆதரவாக காட்டவேண்டும். இல்லாவிட்டால் ஆட்சி கலைக்கப்படும்.
இதேபோல் பெரும்பான்மையை நிருபித்த பின்னர் எதிர்த்து வாக்களிக்கும் எம். எல்.ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
தங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்களை பாதுகாக்க இதுவரை அவர்களை கூவத்தூரிலேயே வைர்துள்ளனர் சசிகலா ஆதரவாளர்கள்.
பதவி ஏற்பு விழாவிற்கு கூட அவர்களை அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.