
விவசாயிகள் தற்கொலைக்கு மதுபழக்கமே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மஹாராஷ்டிரா சுயேட்சை எம்.எல். ஏ. ஒருவர், நடிகை ஹேம மாலினி மதுக் குடிக்கிறார், அதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கேள்வி கேட்டு சர்ச்சையை உண்டாக்கியுள்ளார்.
தற்கொலைக்கு காரணம்?
மஹாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் மதுப்பழக்கம்தான் என காங்கிரஸ் தலைவர் நாராயண் ரானே சமீபத்தில் பேசி இருந்தார். மேலும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூட ‘விவசாயிகள் தங்கள் மகன், மகள் திருமணத்துக்கு அதிகமாக செலவு செய்வதால் கடனாளியாக மாறுகிறார்கள்’ என்று கூறியிருந்தார்.
எம்.எல்.ஏ. பேச்சு
இந்நிலையில் அச்சால்பூர் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. ஓம்பிரகாஷ் பாபாராவ் என்ற ‘பச்சு கடு’ என்பவர் மாரத்வாடாவில் நேற்றுமுன்தினம் நடந்த விவசாயிகள் நிலைகுறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு நேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது-
மதுகுடிக்கிறார்கள்
75 சதவீத எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மது குடிக்கிறார்கள், பத்திரிகையாளர்கள் மது அருந்துகிறார்கள், ஏன் நடிகை ஹேம மாலினி கூட கடுமையாக மது குடிக்கிறார். இவர்கள் எல்லாம் தற்கொலையா செய்து கொண்டார்கள்?
கட்கரி தற்கொலையா?
4 கோடி ரூபாய் செலவு செய்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தனது மகனுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்துவைத்தார். அவர் தற்கொலை செய்து கொள்ளும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டுமா? என்று பேசி இருந்தார்.
திடீர் ‘பல்டி’
நடிகை ஹேமா மாலினி குறித்து ஒம்பிரகாஷ் பாபாராவ் கூறிய கருத்துக்களுக்கு கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் திடீர் பல்டி அடித்த எம்.எல்.ஏ. ஓம் பிரகாஷ் பாபாராவ் ஓஸ்மானாபாத்தில் நிருபர்களுக்கு நேற்று விளக்கம் அளிக்கையில், “ ஹேமாலினி திரைப்படங்களில் குடிக்கிறார் என்று கூறினேன். தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்குடிக்கிறார் எனக் கூறவில்லை’’ எனத் தெரிவித்தார்.