
டெல்லியில் போராடும் விவசாயிகள் போலியானவர்கள் என்றும் அவர்களுக்கு ஆதரவாக வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ள போராட்டத்தை அரசு ஒடுக்க வேண்டும் எனவும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிநீர்களை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
40 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வருகிறது.
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் 25 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இதற்கு அனைத்து கட்சிகள், திரையுலகினர், லாரி உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகள் போலியானவர்கள் என்றும், அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 25ஆம் தேதி நடைபெறவுள்ள போராட்டத்தை அரசு ஒடுக்க வேண்டும் குறிபிட்டுள்ளார்.
அனைத்து தரப்பினரும் இவ்வாறு கூறியிருக்கும் போது இவர் மட்டும் இவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.