
ஷராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் இருந்து பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா விடுவிக்கப்பட்டதில் ரூ.100 கோடி பேரம் பேசப்பட்டதா?, வழக்கை விசாரித்த நீதிபதி ஒருவர் மர்மமாக இறந்தது உள்ளிட்ட விடைதெரியாத கேள்விகளை “கேரவேன்மேகஜின்.இன்” இணையதளம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
கேரவேன்மேகஜின் இணையதளத்தில் நிரஞ்சன் தக்லே என்ற புலனாய்வு பத்திரிகையாளர் இதை எழுதியுள்ளார்.
போலி என்கவுன்டர்
குஜராத் மாநிலத்தில் 2005ம் ஆண்டு நரேந்திர மோடி முதல்வராக இருந்தார். அங்கு உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்தார்.
அப்போது, ஆட்கடத்தல், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஷராபுதீன் அன்வர் ஹுசைன் சேக் என்பவர் 2005ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி அகமதாபாதிற்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த என்கவுன்டர் விவகாரத்தை “தைனிக் பாஸ்கர்” நாளேடு அப்போது அம்பலப்படுத்தியது.
ரூ.100 கோடி பேரம்
இந்த போலி என்கவுன்டர் வழக்கு குஜராத் மாநிலத்தில் விசாரிக்கப்படாமல், மஹாராஷ்டிரா மாநிலத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. நீதிபதி ஒருவர் மர்ம இறந்ததும், அவரிடம் அமித் ஷாவை விடுவிக்க ரூ.100 கோடி வரை பேரம் பேசப்பட்டது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மர்ம மரணம்
ஷராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பிரிஜ் கோபால் ஹர்கிஷன் லோயா என்பவர்தான் மர்மமாக இறந்தார். 2014ம் ஆண்டு, நவம்பர் 30ந்தேதி இரவில் காரில் நாக்பூருக்குச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் மரணமடைந்தார். அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
அவரின் மர்ம மரணம் குறித்து அவரின் சகோதரி அனுராதா பியானி இப்போது “காரவேன்மேகஜின்” இணையதளத்துக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.
நீதிபதி மாற்றம்
ஷராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கை முதலில் விசாரித்தவர் நீதிபதி ஜேடி உத்பத். நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க அமித் ஷா தரப்பில் கேட்கப்பட்டபோது, வழக்கறிஞர்களை கடுமையாக நீதிபதி ஜேடி உத்பத் கண்டித்தார். இதையடுத்து, ஜேடி உத்பத் மாற்றப்பட்டு அந்த வழக்கு பிரிஜ் கோபால் ஹர்கிஷன் லோயாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
(ஷராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கை துவக்கத்திலிருந்து முடிவுவரை ஒரே நீதிபதியே விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் 2012 செப்டம்பரில் உத்தரவிட்டது. அதற்கு மாறாக இந்த இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.)
நெருக்கடிகள்
அதன்பின், மும்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஷராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கை நீதிபதி பிரிஜ் கோபால் ஹர்கிஷன் லோயா என்பவர் விசாரிக்கத் தொடங்கினார். இந்த வழக்கை விசாரிக்கும் போது, நீதிபதி ஹர்கிஷன் லோயாவுக்கு பலவிதமான நெருக்கடிகள் இருந்தன, அழுத்தங்கள் இருந்தன என்று அவரின் சகோதரி தெரிவித்துள்ளார். நீதிபதி இந்த வழக்கை விசாரித்து விட்டு வீட்டுக்கு வரும் போதெல்லாம் மிகவும் பதற்றத்துடனே வந்தார் என அவரின் சகோதரி தெரிவித்துள்ளார்.
தனக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகளால், வழக்கின் விசாரணைக்கு அமித் ஷா நேரடியாக ஆஜராவதில் இருந்து பலமுறை விலக்கு அளித்துள்ளார் நீதிபதி ஹர்கிஷன் லோயா. அமித் ஷாவின் வழக்கறிஞர்கள் கேட்டபோதெல்லாம் விலக்கு அளித்துள்ளார்.
தீபாவளிப்பண்டிகை
நீதிபதி ஹர்கிஷன் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் தீபாவளிப் பண்டிக்கைகாக காடேகானில் உள்ள பூர்வீக வீ்ட்டுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். அப்போது, தனது சகோதரி அனுராதா பியானியிடமும், தனது தந்தை ஹர்கிஷனிடமும் நீதிபதி ஹர்கிஷன் லோயா மனம் விட்டு பேசியுள்ளார்.
தலைமைநீதிபதி
அப்போது, நீதிபதி ஹர்கிஷன் கூறுகையில், “ மும்பை உயர்மன்ற தலைமை நீதிபதி மோகித் ஷா, போலி என்கவுன்டர் வழக்கில் இருந்து அமித் ஷா வை விடுவிக்க ரூ.100 கோடி ரூபாய் வரை தர தயாராக இருக்கிறார்கள். விரைவாக அமித் ஷாவுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்குங்கள். வீடு வேண்டுமா, பணம் வேண்டுமா எனக் அடிக்கடி இரவு நேரங்களில் தொலைபேசியில் தொடர்ந்து கொண்டு அழுத்தம் கொடுக்கிறார்.
இந்த வழக்கில் இருந்து நான் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்றல் வாங்கிப் போக வேண்டும். கிராமத்திற்குச் சென்று விவசாயம் செய்ய விரும்புகிறேன்” என்று தெரிவித்ததாக நிதிபதியின் சகோதரியும், தந்தையும் தெரிவித்தனர்.
மனஅழுத்தம்
இதனால், நீதிபதி ஹர்கிஷன் லோயா போலி என்கவுன்டர் வழக்கை விசாரிக்கும் போது கடும் அழுத்தத்துடன் இருந்தார். தனது நீதிபதி பதவியின் மான்பை காக்க வேண்டும் என்பதில் மிகுந்த தீவிரமாக இருந்தார்.
அதனால்தான், 10 ஆயிரம் பக்கங்களுக்கு நீண்ட குற்றப்பத்திரிகையை மிகக் கவனமாக வாசிக்க ஆரம்பித்த நீதிபதி ஹர்கிஷன் லோயா, பல்வேறு ஆதாரங்களையும், சாட்சியங்களையும் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கினார். இதனால், பிரிஜ் லாலுக்கு அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வந்தது.
விடுவிக்க வலியுறுத்தல்
ஆனால், சாட்சியங்களையும் ஆதாரங்களையும் ஆராய்வதற்கு முன்பாக, அமித் ஷாவை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கும் மனுவை விசாரிக்க வேண்டும் என அமித் ஷா தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், 2014 ஆம் ஆண்டு அக்போடர் 31-ந்தேதி இந்த வழக்கு நீதிபதி ஹர்கிஷன் லோயாவிடம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமித் ஷா ஏன் ஆஜராகவில்லை? என அமித் ஷா தரப்பு வழக்கறிஞர்களிடம் நீதிபதி ஹரிகிஷன் லோயா கேள்வி எழுப்பினார்.
அமித் ஷா வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து நீங்கள் தான் அவருக்கு விலக்களித்திருக்கிறீர்கள்? என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
கண்டிப்பு
அதற்கு நீதிபதி ஹர்கிஷன், “அமித் ஷா மாநிலத்திற்கு வெளியில் இருந்தால்தான் அந்த விலக்கு பொருந்தும்; மகாராஷ்டிராவின் புதிய அரசு பதவியேற்பிற்காக மும்பையில் அமித் ஷா ஏன் இங்கு அவர் வரவில்லை?" என்று கண்டித்தார். டிசம்பர் 15ஆம் தேதி அமித் ஷா ஆஜராகியே தீர வேண்டும் என உத்தரவிட்டார்.
மாரடைப்பு
இந்த நிலையில்தான் கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 30ந்தேதி இரவில் காரில் நாக்பூருக்குச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் மரடைப்பால் இறந்துவிட்டாதாக அவரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விடுவிப்பு
நீதிபதி ஹர்கிஷன் லோயா இறந்தபின், போலி என்கவுன்டர் வழக்கை விசாரிக்க நீதிபதி எம்பி கோசவி என்பவர் நியமிக்கப்பட்டார். விசாரணை தொடங்கிய 15 நாட்களில் அதாவது டிசம்பர் 30ஆம் தேதியன்று அமித் ஷாவை வழக்கிலிருந்து விடுவித்தார் கோசவி. சிபிஐ அரசியல் உள்நோக்கத்தோடு அவரை இந்த வழக்கில் சேர்த்ததாக நீதிபதி குறிப்பிட்டார்.
கேள்விகள்
இந்நிலையில், மர்மமாக இறந்த நீதிபதி ஹர்கிஷன் லோயாவின் சகோதரி அனுராதா பியானி, தந்தை ஹர்கிஷன் ஆகியோர் சில விடை தெரியாத ேகள்விகளை இப்போது முன்வைக்கின்றனர். அவை.
1. நீதிபதி ஹர்கிஷன் மாரடைப்பால் இறந்த நேரத்தில் பல்வேறு வேறுபாடுகள், மாறுபாடுகள் நிலவுகின்றன.
2. நீதிபதி ஹர்கிஷனுக்கு மராடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவருக்கு முந்தைய எந்த மருத்துவஅறிக்கையும் குறிப்பிடவில்லை.
3. நீதிபதி காரில் பயணித்தபோது, அவரை மருத்துவமனைக்கு அவசரச் சிகிச்சைக்காக ஏன் ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்டார்.
4. நீதிபதியின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில், தங்களின் குடும்பத்தாரோடு தொடர்பில் இல்லாத , யாரோ மர்மநபரின் கையொப்பம் ஒவ்வொரு பக்கத்திலும் இடப்பட்டுள்ளது. அவர் யாரென்று இன்று வரை தெரியவில்லை.
5. நீதிபதி பயன்படுத்தி மொபைல் போன் அவரின் குடும்பத்தாரிடம் திருப்பி ஒப்படைக்கப்படும் போது, மொபைல்போனில் உள்ள அனைத்து விவரங்களும் அழிக்கப்பட்டு இருந்தது ஏன்
6. நீதிபதிக்கு மாரடைப்பு வந்தது என்று கூறினால், அவர் அணிந்திருந்த உடையில், ரத்தக்கறை எப்படி வந்தது.
இதற்கெல்லாம் பதில் கிடைக்குமா என அந்த இணைதளம் கேள்வி எழுப்பியுள்ளது.