
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிக் குண்டு இந்தியக் கடலோரக் காவல்படையினர் பயன்படுத்தக்கூடியதுதான் என மண்டபம் கடலோரக் காவல்படை கமாண்டர் உண்மையை போட்டு உடைத்துள்ளார்.
கடந்த 13-ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மீனவர்கள் பிச்சை, ஜான்சன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவத்தின்போது மீனவர்களது படகில் சிதறிக் கிடந்த துப்பாக்கிக் குண்டு ஒன்றையும் கண்டெடுத்து வந்தனர்.
இந்நிலையில் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட குண்டு இந்தியக் கடற்படையில் பயன்படுத்துவது இல்லை என்றும், கடலோர காவல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்றும் மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
அதற்கு வக்காலத்து வாங்கும் விதமாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும், மீனவர்கள் மீது கடலோர காவல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தவிலை என தெரிவித்தார். ஆனால் மீனவர்கள் அந்த குண்டுகளை எடுத்துவந்து கொடுத்திருந்ததால் அவர்கள் பொய் சொல்கிறார்களா என சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தங்கச்சிமடத்தில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க வந்திருந்த மண்டபம் கடலோரக் காவல்படை கமாண்டர் ராமாராவ் செய்தியாளர்களிடம் பேசும் போது , மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட 0.22 மி.மி அளவு கொண்ட துப்பாக்கிக் குண்டு இந்தியக் கடலோரக் காவல்படையில் பயன்படுத்தக்கூடியதுதான் என்ற உண்மையைப் போட்டு உடைத்தார்.
கமாண்டரின் இந்த பேட்டி மீனவ மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு பேட்டியளித்த நிர்மலா சீத்தாராமன் இது போன்ற குண்டுகளை கடலோர காவல்படை பயன்படுத்திவதில்லை என்று கூறினாரே, அவர் பொய் சொன்னாரா – அல்லது அது பற்றி அமைச்சருக்கே தெரியாதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதே நேரத்தில் எந்த ஒரு பிரச்சனையையும் முழுமையாக தெரிந்துகொள்ளாமல் மனம்போன் போக்கில் திண்டுக்கல் சீனிவாசன் போன்றோர் பேட்டி கொடுக்கக்கூடாது என்றும் மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.