
தி.மு.க.வினுள் ஸ்டாலின் மற்றும் அழகிரிக்கு இடையில் நடக்கும் யுத்தம் மட்டும்தான் வெளியுலக கண்களுக்கு தெரிகிறது. ஆனால் ஸ்டாலின் மற்றும் ராஜாத்தியம்மாளுக்கு நடுவில் நடக்கும் பனிப்போர், அறிவாலயத்தின் மூத்த தலைகளுக்கு கூட தெரியாது.
விவகாரம் இதுதான்...எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் இறுதி விழா வரும் 30-ம் தேதியன்று சென்னையில் நடக்கிறது. இதில் வாழ்த்துரையாற்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை அழைத்து, அழைப்பிதழில் பெயர் போட்டுள்ளனர். கூடவே ராஜ்யசபா எம்.பி.யான கனிமொழியின் பெயரையும் போட்டு அழைப்பு விடுத்துள்ளனர்.
அ.தி.மு.க. தலைமை தெரிந்து செய்ததோ அல்லது தெரியாமல் செய்ததோ தெரியவில்லை ஸ்டாலினுக்கு இணையாக கனிக்கும் மரியாதை கொடுத்துவிட்டனர். ஆனால் இந்த விஷயம் ஸ்டாலின் தரப்பை வெகுவாகவே சூடேற்றிவிட்டதாம். ’அதான் தலைவரை அழைச்சிருக்கீங்கள்ள அப்புறம் எதுக்கு மகளிரணி மாநில தலைமையெல்லாம்?’ என்று சென்னை தி.மு.க. புள்ளி அரசு செயலர் ஒருவரிடம் பாய்ந்துவிட்டாராம். இது ஆளுங்கட்சியின் தலைமை கவனத்துக்கு போக, ‘ஓ இதுக்குள்ளே இவ்வளவு அரசியல் இருக்குதா?’ என்று தலையை ஆட்டிவிட்டு வேலையை துவக்கிவிட்டார்கள்.
ராஜாத்தியம்மாளுக்கு நெருக்கமான தென் தமிழக நபர் ஒருவரிடம் இந்த விஷயத்தை ஓதியிருக்கிறது அ.தி.மு.க. தலைமை. அந்த நபர் அரசியல்வாதியல்ல, ஆனால் அரசியலுக்குள் அரசியல் செய்யும் ஒரு பவர் செண்டர். அவர் ராஜாத்தியம்மாளை சந்தித்து கேட்ட ஒரே கேள்வி, ‘ஒரேதாய் வயிற்றில் பிறந்தவர்கள் அழகிரியும், ஸ்டாலினும். சொந்த அண்ணனையே கட்சிக்குள் வரவிடாமல் தடுக்கும் ஸ்டாலின், சித்தி மகளான கனிமொழியை எப்படி அரசியலில் வளர விடுவார்?’ என்பதுதான்.
ஏற்கனவே கணவரை இழந்த சோகத்தில் இருந்து மீளாத ராஜாத்தியம்மாளுக்கு இந்த புதிய தலைவலி பெரும் இடியாக இறங்கியிருக்கிறது. அவர் ஜெர்க் ஆவதை பார்த்த பவர் செண்டர் மேலும் சில பிட்டுகளை அள்ளிப் போட்டிருக்கிறார்...
“உங்க கணவர் இறந்த பிறகு எவ்வளவோ புகழஞ்சலி கூட்டம் நடந்தது. எதிலேயாவது கனிமொழியை பிரதானப்படுத்தினாரா ஸ்டாலின்? பெண்களுக்கு சம உரிமை! சம உரிமை!ன்னு போராடியவரோட சொந்த இரத்தம்தானே கனிமொழி. அப்பாவோட இறப்பிற்கு பின், அவரது சாதனையை நினைவு கூறும் ஒரு மேடையில் கூட பிரதானப்படுத்தப்படும் உரிமை அந்த பெண்ணுக்கு இல்லையா? தமிழகமெங்கும் நடந்த அத்தனை மேடையிலும் ஸ்டாலின் மட்டுமே பிரதானம்.
ஏன் செல்வி, அழகிரி, தமிழரசுவை பிரதானப்படுத்தினார்களா?இல்லையே! என்று சிலர் பேசலாம். செல்வி, தமிழரசு இருவரும் அரசியலில் இல்லை. அழகிரி தி.மு.க.விலேயே இல்லை! ஆனால் ஸ்டாலினின் நிழலாக, ஒரு பசுவை தொடரும் கன்றுக்குட்டி போல் நம் வீட்டு பொண்ணுதானே (கனிமொழியேதான்) போய்க் கொண்டே இருக்கிறார். அவருக்கு ஒரு மேடையில் அந்தஸ்து கொடுத்தால் குறைந்தா போய்விடும்?
இந்த ஒன்றே போதும், ஸ்டாலின் எந்தளவுக்கு கனியம்மாவை தட்டி இறக்கி வைத்திருக்கிறார் என்று! தங்கைதானே! என்று ஸ்டாலினே நினைத்தாலும் கனிக்கு பிரதான இடம் கிடைக்காதபடி துர்காவும், சபரீசனும் தெளிவாக இருக்கிறார்கள். இன்று தி.மு.க.வின் வெளிப்படையான தலைவராக வேண்டுமானால் ஸ்டாலினிருக்கலாம். ஆனால் திரைக்குப் பின் இருப்பது இவர்கள் இருவரும்தான்.
கனியம்மா அரசியல் எழுச்சி பெறுவதில் இவர்கள் இருவருக்கும் மனமில்லை. கனியை பார்த்து அஞ்சுகிறார்கள். தமிழ்நாட்டில் பெண் தலைவர்கள் மேல் மக்களுக்கு ஒரு கரிசனம் உண்டு. அதிலும் சமீபத்தில் அப்பாவை இழந்த பெண், அதனால் கொஞ்சம் அசந்தாலும் மக்களே அவரை முதல்வராக்கிவிடுவார்கள்! என்பது ஸ்டாலின் குடும்பத்தின் பயம்.
அதனால்தான் யாரோ துரைமுருகனையும், டி.ஆர்.பாலுவையும் கழகத்தில் ப்ரமோஷன் கொடுத்து முன்னிலைப்படுத்தும் ஸ்டாலின் தரப்பு கனியம்மாவுக்கு முன்னேற்றத்தை கொடுக்க மறுக்கிறது.
2ஜி வழக்கு விடுதலையின் போது ஸ்டாலின் குதூகலித்தார், கனியை அரவணைத்து சந்தோஷித்தார். ஆனால் ரெண்டு நாட்கள் கூட நீடிக்கவில்லை அந்த சந்தோஷம். தமிழகத்தில் எங்குமே 2ஜி விடுதலை கொண்டாட்ட பொதுக்கூட்டம் கூடாது! என்று வாய்மொழி உத்தரவு வந்தது. மீறிய திருப்பூர் மாவட்ட செயலாளர் செல்வராஜூக்கு மிக கடுமையான எச்சரிக்கை விழுந்தது.
அதே பொறாமையில்தான் இப்போது எம்.ஜி.ஆர். விழாவுக்கு தமிழக அரசாங்கமே அழைத்ததை இவர்களால் தாங்கிக்க முடியவில்லை. பாய்கிறார்கள்!
அதனால்தான் கேட்கிறேன், அழகிரி நிலைமை உங்கள் பொண்ணுக்கும் வர எத்தனை நாட்கள் தேவைப்படும்? சூதானமாய் பிழைச்சுக்கோங்க.” என்று ஓதிவிட்டு கிளம்பிவிட்டார்.
மனம் வெம்பிப் போன ராஜாத்தியம்மாள் இந்த தகவலை கனிமொழியிடம் கூட கேட்கவோ, கிராஸ் செக் செய்யவோ இல்லை. காரணம்? ‘ஸ்டாலின் அண்ணன் எனக்கு நல்ல வாய்ப்புதான் தர்றார். நீ சும்மா இரும்மா!’ என்று வாயை அடைத்துவிடுவார் என்கிற எண்ணமே. அதனால் நேரடியாக ஸ்டாலின் குடும்பத்தின் நெருங்கிய நபர் ஒருவருக்கே போன் போட்டு கேட்டுவிட்டாராம் ராஜாத்தி. அந்த நபர் துர்காவிடம் கேட்க, அது ஸ்டாலின் காதுகளை எட்ட, இதோ பனிப்போர் துவங்கிவிட்டது என்கிறார்கள்.
ராஜாத்தியம்மாளை இப்படி குழப்பி, தனக்கெதிராக தூண்டிவிட்டு கட்சிக்குள் குழப்பங்களை விளைவிக்க தனக்கு எதிரியான சில அரசியல் மையங்கள்தான் செய்கிறது! என்பதை ஸ்டாலின் தெள்ளத்தெளிவாக கண்டுபிடித்துவிட்டார். இனி அவர்களுக்கு செக் வைக்கும் வேலைகளை துவக்குவார்! கூடவே கனிமொழியின் அரசியல் வளர்ச்சிக்கு தானோ தனது மனைவி, மருமகன் உள்ளிட்ட யாரும் எதிரியில்லை! என்பதை ராஜாத்தியம்மாளிடம் அவர் விளக்கலாம், வாய்ப்புள்ளது! என்கிறார்கள்.
கவனிப்போம்!