சந்துருவிடம் 96,000 வழக்குகள் உள்ளது. அதை எல்லாத்தையும் ஜெய் பீம் மாதிரி படமா எடுக்கனும்.. சத்தியராஜ்

By Ezhilarasan BabuFirst Published Dec 16, 2021, 1:49 PM IST
Highlights

அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை சொல்லிக் கொள்கிறேன். தற்போது சென்சார் போர்டில் அனுமதி வாங்கி விட்டாலும் படம் வெளியான பிறகு ஒரு சென்சார் உள்ளது சிலர் படத்தை எதிர்த்து பிரச்சினை செய்வார்கள், ஜெய்பீம் திரைப்படம் வெளியான போது அப்படித்தான் நடந்தது. சினிமாவில் காலத்துக்கு ஏற்ப ஒரு ட்ரெண்ட் உருவாகும். தற்போது சமூகநீதி ஜெயிக்கிற ஒரு ட்ரெண்டு உருவாகி உள்ளது. 

ஒய்வு பெற்ற நீதியரசர் சந்துருவிடம் 96 ஆயிரம் வழக்குகள் உள்ளது. அதை அவர் ஜெய் பீம் திரைப்படம் போல வணிக ரீதியாக நல்ல படங்களாக எடுக்கலாம் என நடிகர் சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார். அது போன்ற படங்களின் மூலம் சினிமாவிற்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் ஆரோக்கியமாக படங்களாக அவைகள் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். 

பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க வழக்குகளை அணுகி பல சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கியவர் நீதியரசர் சந்துரு. கிட்டத்தட்ட அவர் நீதிபதியாக பணிபுரிந்த காலத்தில் 96 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார் என்பது அவரின் பெருஞ்சாதனை. நாள் ஒன்றுக்கு 75 வழக்குகள் மாதத்திற்கு 1500 தீர்ப்புகள் என இந்தியாவிலேயே எந்த நீதிபதியும் செய்யாத சாதனையை செய்து காட்டியவர் சந்துரு. பஞ்சமி நிலங்களை வேறு யாருக்கும் ஒதுக்கக் கூடாது, மேடை நாடகங்களுக்கு போலீஸ் கமிஷனரிடம் அனுமதி தேவையில்லை, சத்துணவு அங்காடி ஊழியர்கள் நியமனத்தில்  இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும், கோவில்களில் பெண்கள் பூஜை செய்வதற்கு எந்த தடையும் இல்லை, மாட்டு இறைச்சி கடைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய தீர்ப்பு என பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளுக்கு சொந்தக்காரர் சந்துரு. நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றபோது ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடந்த பணி ஓய்வு பாராட்டு விழாவை வேண்டாம் என்று மருத்தவர். பணி ஓய்வு பெறும் நாளில் தனக்கு வழங்கப்பட்ட சொகுசு காரை நீதிமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டு தன் நண்பர்களுடன் மின்சார ரயிலில் ஏறிவீட்டுக்கு சென்றவர் சந்துரு. 

நீதிமன்ற சம்பிரதாயங்களை ஆடம்பர மரபுகளை உடைத்தெறிந்து  தான் நீதிமன்றங்களில் நுழையும்போதே பாதுகாப்புக்காக வரும் பரிவாரங்களை வேண்டாம் என்று புறந்தள்ளியவர் அவர். வழக்கறிஞர் ஒருவர் தலைமை நீதியரசரே என அழைத்த போது அந்த வார்த்தை தனி நபர் துதி இதை பயன்படுத்த வேண்டாம் என்றும் நீதிபதியை நீதியரசர் என்ற வாக்கியங்களை விட நீதி நாயகம் என அழைக்கப்படுவதையே தான் விரும்புவதாகக் கூறினார். இப்படி பல புதுமைகளுக்கும், எளிமைக்கும் சொந்தக்காரரான சந்துரு தனது வழக்குகளால் பிரபலமடைந்ததை காட்டிலும், அவர் சந்தித்த வழக்கு திரைப்படமான போது தமிழக மக்களால் அதிகமாக கொண்டாடப்பட்டார், கொண்டாடப்பட்டு வருகிறார். அவர் வழக்கறிஞராக இருந்த போது சந்தித்த ஒரு வழக்குதான் ஜெய்பீம் திரைப்படமாக உருவாகியுள்ளது. பல அதிகார மிரட்டல்கள், எதிர்ப்புகளைத் தாண்டி ராஜாக்கண்ணு என்ற பழங்குடியின சமூகத்தவரின் கொலை வழக்கில் போராடி நீதியை பெற்றுத் தந்தார் சந்துரு. ஜெய் பீம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா, சந்துருவின் கதாபாத்திரத்தைதான் ஏற்று நடித்துள்ளார்.

தற்போது அந்தப் படம் பெரும் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மறுபுறம் சில சர்ச்சைகளையும் எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னை வடபழனியில் ஒரு திரைப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் நீதிநாயகம் சந்துருவை வானளவு புகழ்ந்து நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார். அதாவது தீர்ப்புகள் விற்கப்படும் என்ற திரைப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், நீதியரசர் சந்துரு, திலகவதி ஐபிஎஸ், இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர், மயில்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய நடிகர் சத்யராஜ் நாங்கள் எல்லாம் நிழல ஹீரோக்கள். நிழல் ஹீரோக்களை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடுங்கள், ஆனால் இவர்களைப் போன்ற நிஜ ஹீரோக்களை தான் போற்ற வேண்டும். அவர்களால் தான் எங்கள் பிழைப்பு ஓடுகிறது. வேதம்புதிது படம் தடை செய்யப்பட்டபோது எம்ஜிஆர் தான் அதை வெளியில் கொண்டு வர உதவினார். அதேபோல் பெரியார் படத்தை காப்பாற்றிக் கொடுத்தவர் நீதியரசர் சந்துருதான். அந்தப் படத்தில் ஒரு வரிகூட,  பாடல்கூட கட் செய்யாமல் அப்படியே வெளியாக காரணமாக இருந்தவர் சந்துருதான்.

அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை சொல்லிக் கொள்கிறேன். தற்போது சென்சார் போர்டில் அனுமதி வாங்கி விட்டாலும் படம் வெளியான பிறகு ஒரு சென்சார் உள்ளது சிலர் படத்தை எதிர்த்து பிரச்சினை செய்வார்கள், ஜெய்பீம் திரைப்படம் வெளியான போது அப்படித்தான் நடந்தது. சினிமாவில் காலத்துக்கு ஏற்ப ஒரு ட்ரெண்ட் உருவாகும். தற்போது சமூகநீதி ஜெயிக்கிற ஒரு ட்ரெண்டு உருவாகி உள்ளது. அதனால் தான் படங்களில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்றவர்களின் புகைப்படங்கள் இடம்பெறுகின்றன. அது பெரிய வெற்றியும் பெறுகிறது. அம்பேத்கர் சொன்னது போல கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய், கற்பிக்காமல் ஒன்று சேர்ந்து புரட்சி செய்தால் அது வன்முறையாக மாறி விடும் எனவே கற்பித்த பிறகு ஒன்று சேர்ந்து புரட்சி செய்ய வேண்டும் என ஜெய்பீம் திரைப்படத்தில் அழகாக சொல்லியிருப்பார்கள். சந்துரு அவர்களிடம் 96 ஆயிரம் வழக்குகள் உள்ளது. அதை வணிக ரீதியாக நல்ல படங்களாக எடுக்கலாம். தொடர்ந்து சமூக நீதி குறித்த படங்கள் வெளியானால் சினிமாவில் மட்டுமல்ல சமூகத்திற்கும் அது ஆரோக்கியமாக இருக்கும் இவ்வாறு அவர் பேசினார். 
 

click me!