
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே தோட்டத்தில் அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., ஆண்டிவேல், 65, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எரியோடு அருகே புதுரோடு கிராமத்தை சேர்ந்த ஆண்டிவேல், 2001- 06 வரை வேடசந்துார் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருந்தார். பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றிய செயலராக பணியாற்றினார். அந்த பொறுப்பில் இருந்து 2004 ல் விடுவிக்கப்பட்டார்.அதன்பின் ஈமு கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டார்.
இவரது பரிந்துரையில் இப் பகுதி விவசாயிகள் பலரும் ஈமு கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டனர். நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து இவருக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
அதன்பின் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.எரியோடு அருகே தண்ணீர்பந்தம்பட்டியில் இவரது தோட்டம் உள்ளது. அங்கு நெல் அறுவடை பணி நடந்து வருகிறது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஆண்டிவேல், நேற்று மாலை நீண்ட நேரம் வீடு திரும்பா ததால் உறவினர்கள் தேடி சென்றனர். அப்போது தோட்டத்தில் அவர் இறந்து கிடந்தார்.
இது குநித்து தகவலறிந்த டி.எஸ்.பி., சிவக்குமார், இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் ஆண்டிவேல் உடலை கைப்பற்றி விரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக செய்தியாள்களிடம் பேசிய போலீசார், ஆண்டிவேலின் உடலில் வெட்டு காயம் இல்லை. தாடையில் காயம் உள்ளது. கீழே விழுந்தால் கூட இது ஏற்படலாம். ரத்த அழுத்தம், மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது மரணம் குறித்து ஒரு முடிவுக்குவர முடியும் போலீசார் தெரிவித்தனர்.