எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என அனைவருக்கும் தெரியும் எனவும், மைனாரிட்டி அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுவதில் எந்த நியாயமும் இல்லை எனவும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குழு தலைவர் ராமசாமி தெரிவித்துள்ளார். நீண்ட நாள் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று முன்தினம் அதிமுகவின் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தன. பேச்சுவார்த்தைக்கு பிறகு தலைமை அலுவலகம் சென்ற ஒபிஎஸ் அங்கு எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து ஒன்றாக இணைந்ததாக அறிவித்தார். மேலும் அங்கு ஒபிஎஸ்க்கு துணை முதலமைச்சர் பதவியும், கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. பின்னர் பேசிய ஒபிஎஸ்சும், இபிஎஸ்சும் இரட்டை இலையை மீட்டு கட்சியை காப்பாற்றுவோம் என உறுதி மொழி எடுத்தனர்.மேலும் சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என வைத்தியலிங்கம் எம்.பி தெரிவித்தார். இதையடுத்து டிடிவி தினகரனுக்கு தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல், செந்தில்பாலாஜி உள்ளிட்ட 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். இதைதொடர்ந்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதலமைச்சரை மாற்ற வேண்டும் என கடிதம் அளித்தனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தமிழகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட உத்தரவிட வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குழு தலைவர் ராமசாமி, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என அனைவருக்கும் தெரியும் எனவும், மைனாரிட்டி அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுவதில் எந்த நியாயமும் இல்லை எனவும் தெரிவித்தார். சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் எனவும், மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது எனவும் தெரிவித்தார்.