தலைகீழாக நின்னாலும் வேலைக்கே ஆகாது... திமுகவை மக்கள் ஏற்கவே மாட்டாங்க... எல்.முருகன் அதிரடி சரவெடி..!

By Asianet TamilFirst Published Feb 11, 2021, 9:24 PM IST
Highlights

அனைவருக்கும் பொது எதிரி திமுக என்று சசிகலா கூறி இருக்கிறார். அது உண்மைதான். ஆனால், சசிகலா அதிமுகவில் சேருவாரா என்பதெல்லாம் அவர்கள் உட்கட்சி பிரச்னை என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
 

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நானும் போட்டியிடுவேன். கொங்கு மண்டலத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவேன். பா.ஜனதாவுக்கு எவ்வளவு தொகுதிகள் என்பதை இப்போது சொல்ல முடியாது. அதை தலைவர்கள் பேசி முடிவு செய்வார்கள். வேல் யாத்திரையைத் தொடர்ந்து வெற்றி யாத்திரையை பாஜக இன்று தொடங்குகிறது. பாஜக சார்பில் தேர்தல் பிரசாரம் தொகுதி வாரியாக தொடர்ந்து நடக்கும்.


நாங்கள் வேலை கையில் எடுத்ததும் அதை குறை சொன்னார்கள். இந்துகளையும் இந்து கடவுள்களையும் இழிவுப்படுத்தியவர்களைக் கண்டிக்கவே நாங்கள் வேல் யாத்திரை நடத்தினோம். இப்போது அவர்களும் கையில் வேல் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்தாலும் வேலைக்கு ஆகாது. திமுக கூட்டணியை மக்கள் ஏற்கவே மாட்டார்கள். பாஜக அதிமுக கூட்டணியில் இருக்கிறது. கூட்டணி செயல்பாடுகள் பற்றி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. சசிகலா வருகையால் என்ன தாக்கம் ஏற்படும் என்பதை இப்போது சொல்ல முடியாது. அவர் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்பதை பொருத்து அது தெரியவரும்.
அனைவருக்கும் பொது எதிரி திமுக என்று சசிகலா கூறி இருக்கிறார். அது உண்மைதான். ஆனால், சசிகலா அதிமுகவில் சேருவாரா என்பதெல்லாம் அவர்கள் உட்கட்சி பிரச்னை. அதுபற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. வரும் தேர்தலில் பாஜக பிரதிநிதிகள் சட்டப்பேரவையில் நிச்சயம் இடம்பெறுவார்கள். பிரதமர் மோடியின் திட்டங்களால் தமிழக மக்கள் ஏராளமானோர் பலன் அடைந்துள்ளார்கள். அது வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிப்படும்.” எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
 

click me!