
பிரதமர் மோடியின் ‘நமோ’ ஆப்ஸில் பா.ஜனதா கட்சியின் எம்.பி.க்களே ‘குட் மார்னிங்’ கூறுவதில்லை. பின் எப்படி டிஜிட்டல் மயம் ஊக்குவிக்கப்படும் என்று சிவசேனா கட்சி கிண்டல் செய்துள்ளது.
சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் தலையங்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது-
காலை வணக்கம்
நமது பிரதமர் மோடி மிகவும் ஒழுக்கமானவர். அதிகாலையில் எழுந்து, தனது கட்சி எம்.பி.க்களுக்கு ‘நமோ’ ஆப்ஸ் மூலம் காலை வணக்கம்(குட் மார்னிங்) சொல்கிறார். ஆனால், பிரதமர் மோடிக்கு சில எம்.பி.க்கள் மட்டுமே பதில் அளித்து வணக்கம் சொல்கிறார்கள்.
யாரும் சொல்வதில்லை
மற்றவர்கள் யாரும் பிரதமர் மோடிக்கு எந்தவிதமான பதிலும் தெரிவிப்பதில்லை. காலையில் தினமும் வணக்கம் சொல்வதோடு, எந்த எம்.பி.க்கள் பதில் அளிக்காமல் இருக்கிறார்களோ? அவர்களுக்கு தனியாக ஒரு செய்தியையும் பிரதமர் மோடி அனுப்ப வேண்டும்.
தயாரில்லை
இந்தியாவை டிஜிட்டல் மயமாக மாற்ற பிரதமர் மோடி பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். ஏழை மக்களுக்கு கூட கடன்கள் ஆன்-லைன் மூலம் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.ஆனால், பா.ஜனதா தலைவர்கள் டிஜிட்டல் முறைக்கு மாற தயாராக இல்லை.
யாரை பின்பற்றுவார்கள்?
பா.ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தும், பல்வேறு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தபோதிலும், அதன் சித்தாந்தங்கள் இன்னும் அந்தரத்திலேதான், நிலையில்லாமல் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி தான் கூட்டணி வைத்திருக்கும் காஷ்மீரில் மெகபூபாமுப்தியின் சித்தாந்தங்களை பின்பற்றுவார்களா? அல்லது பீகாரில் நிதிஷ் குமார் சித்தாந்தங்களையா? அல்லது மஹாராஷ்டிராவில் இந்துக் கட்சியான சிவசேனாவின்சித்தாந்தங்களை பின்பற்றுவர்களா? என்பதை விளக்க வேண்டும்.
வருத்தம்
பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் பொறுப்பற்றுசெயலாற்றுகிறார்கள் என சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார்.
முடிவுக்கு முன்பே வாழ்த்து
அதற்கு ஏற்றார்போல், பா.ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப குழு, சமூக ஊடக குழு ஆகியவை தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே பிரதமர்மோடிக்கு வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் அனுப்பி இருக்கிறார்கள்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.