மத்திய அரசிடம் உங்கள் அப்பன் வீட்டு சொத்தா என கேட்கிறார் உதயநிதி. உங்க தாத்தா பேனா வைக்க 83 கோடி நிதி எங்கிருந்து வந்தது...? எழுதாத பேனாவுக்கு எதற்கு கடலில் சிலை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் , அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் ஹுசேன் தலைமையில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி, தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் உள்ளட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் சிறப்பு தீர்மானமாக ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது தொடர்பாகவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆசியோடு என்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்த தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார். எனக்கு அனைவரும் சிறப்பான முறையில்.கட்சி பணியாற்ற முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மதுரையே குலுங்குகின்ற அளவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க மாநாடு நடந்து முடிந்தது. அதிமுக வரலாற்றிலேயே 15 லட்சம் பேர் கலந்துக்கொண்ட மாநாடு. மாநாடு வெற்றி பெற்றதற்கு கட்சி நிர்வாகிகள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த கருத்தோடு பணியாற்றியதால் தான் வெற்றி என தெரிவித்தார். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தது அதிமுக, கொரோனா தொற்று காலத்திலும் சிறப்பாக செயல்பட்டது அதிமுக, 520 தேர்தல் வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றவில்லை; நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு பின்னும் அமைச்சரை பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்யாதது சரியில்லையெனவும் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அரசியல் கத்துக்குட்டியான உதயநிதி ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை, அண்ணா தி.மு.க.வின் மதுரை மாநாட்டை விமர்சித்த உதயநிதியால் சேலத்தில் தி.மு.க இளைஞரணி மாநாடு நடத்துவேன் என்றார். ஆனால் அவரால் நடத்த முடியாமல் 3 முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அண்ணா தி.மு.கவை விமர்சித்தால் இது தான் நிலைமை என கூறினார். எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்கவே, ஒடுக்கவோ, முடக்கவோ முடியாது. எதிரிகளோடு துரோகிகளும் கை கோர்த்தார்கள் இருவரையும் வென்று காட்டினோம். இதற்கு முன்னர் பொதுக்குழுக்களில் நம் முகத்தில் பதட்டம் இருந்தது. இந்த பொதுக்குழு அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி காண முடிகிறது. வழக்குகளில் பெற்றுள்ளோம். இனி அதிமுக ஜெட் வேகத்தில் பயணிக்கும்.
அமைச்சர் ஒருவருக்கு நீதிமன்றத்தால் தண்டனை கிடைத்துள்ளது. சட்டசபையில் முன் வரிசையில் உள்ள அமைச்சர்கள் எல்லோரும் சிறை செல்வார்கள். அதிமுகவை ஊழல் கட்சி என ஸ்டாலின் விமர்சிக்கிறார். ஆனால் திமுக அமைச்சர்கள் தான் ஒவ்வொருவராக சிறைக்கு செல்கிறார்கள். ஸ்டாலினுக்கு கட்சியை நடத்த தெரியவில்லை. ஆட்சியையும் நடத்த தெரியவில்லை. அதனால் தான் செயலற்ற முதலமைச்சர் என சொல்கிறோம். திமுக அரசுக்கு இறங்கு முகம் தொடங்கிவிட்டது. மக்கள் மனம் மாறிவிட்டது. அடுத்த என்ன தேர்தல் வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும்
தென்மாவட்ட அதிகனமழைக்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தால் பொது மக்கள் பாதிப்பு. கடந்த 17 தேதி முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டு நாட்களாக வெள்ள நீர் வடிய வில்லை.தூத்துக்குடி மாவட்டத்தில் பக்கிள் ஓடையில் அதிமுக ஆட்சியில் 80 சதவீதம் நிறைவு செய்தது, திமுக ஆட்சியில் 20 சதவீதம் பணிகளை கூட முடிக்க வில்லை, அதனால் வெள்ளநீர் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். புயல், அதிகனமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேவையான நிதியுதவிவை மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழக அரசு கேட்கும் எந்த நிதியையும் மத்திய அரசு வழங்கியது இல்லை என்ற வரலாறு உள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டோம்.
அப்பன் வீட்டு சொத்தா என உதயநிதி மத்திய அரசை கேட்கிறார். எப்படி பேச வேண்டும் என நாகரீகம் தெரியாமல் பேசுகிறார் உதயநிதி. உதயநிதி பேச்சால் மக்கள்தான் பாதிக்கப்படுவர் , கேட்டுப் பெற வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம் . எனவே நிவாரண நிதியை முறையாக கேட்டுப் பெற வேண்டும். மத்திய அரசிடம் உங்கள் அப்பன் வீட்டு சொத்தா என கேட்கிறார் உதயநிதி. உங்க தாத்தா பேனா வைக்க 83 கோடி நிதி எங்கிருந்து வந்தது...? எழுதாத பேனாவுக்கு எதற்கு கடலில் சிலை. யார் பணத்தில் , 42 கோடியை ஊதாறித் தனமாக கார் ரேசுக்காக செலவளித்தனர்..? விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டாக பேசிக் கொண்டிருக்கிறார். நல்ல முறையா கேட்டாலே மத்திய அரசு நிதி கொடுக்காது. போற போக்கில் கேட்டால் எப்படி நிதி கிடைக்கும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.