எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!

Published : Dec 17, 2025, 10:23 AM IST
EPS vs MK Stalin

சுருக்கம்

தங்கள் அற்ப அரசியலுக்காக பொய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியது திமுக. இதுபோன்ற சதி திட்டங்களால், மக்களுக்காக உழைக்கும் நேர்மையான தலைவரான எடப்பாடி பழனிசாமியை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை தெரிந்து கொள்ளட்டும்

தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லுாரிகள் கட்டட கட்டுமானத்தில் முறைகேடு நடந்ததாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கூறப்பட்ட புகாரில் ஆதாரம் இல்லை என்பதால் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது' என சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ முந்தைய அதிமுக ஆட்சி நடைபெற்றபோது, அரியலுார், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருப்பூர், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவ கல்லுாரிகள் கட்டப்பட்டன. எடப்பாடி னிசாமி முதலமைச்சராக இருந்தபோது, அவரிடம் பொதுப்பணித் துறை இருந்தபோது, மத்திய அரசின் 60%, மாநில அரசின் 40% நிதி பங்களிப்புடன் மருத்துவ கல்லுாரிகள் கட்டப்பட்டன.

இந்த கல்லுாரிகள், தேசிய மருத்துவ ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை. மருத்துவ கல்லுாரிகளுக்கான கட்டடங்கள் கட்டியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இது சம்பந்தமான முறைகேட்டில் அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டுள்ளதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

சிபிஐ., உள்ளிட்ட மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புகள் விசாரணை செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற்று, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்து, நான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐ.,க்கு உத்தரவிட வேண்டும்’’ எனக்கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு, உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஸ்ரீவஸ்தவா, அருள் முருகன் ஆகியோர் அடங்கிய பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன். ‘‘மனுதாரரின் புகார் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை விரிவான விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், புகாரில் ஆதாரம் இல்லை என தெரியவந்தது. அந்த விசாரணை அறிக்கை விஜிலென்ஸ் ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அவரும் அந்த அறிக்கையை மாநில அரசுக்கு சமர்ப்பித்தார். மாநில அரசும், அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு விட்டது’’ என வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதிகள், 'இந்த மனுவில் எந்த முகாந்திரம் இல்லை என புகார் முடித்து வைக்கப்பட்டதை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியுமா? என்பது குறித்து உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி மனுதாரர் விளக்கம் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, ‘‘அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 11 மருத்துவ கல்லுாரிகளில் முறைகேடு எதுவும் இல்லை என தமிழக அரசு கூறியிருப்பது ‘அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனி சாமிக்கு, திமுக அரசு அளித்துள்ள நற்சான்றிதழ்' என அக்கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக, அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது கொண்டு வந்த 11 மருத்துவ கல்லுாரிகளில் முறைகேடு என திமுக வைத்த பொய் குற்றச்சாட்டில், துளிகூட முகாந்திரம் இல்லை என்று தற்போது திமுக அரசே தெரிவித்துள்ளது. முந்தைய எடப்பாடி பழனிசாமி அரசுக்கு திமுக அரசு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.

உயர்தர மருத்துவ கட்டுமானத்தை மக்களிடம் சேர்த்து எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் 11 மருத்துவ கல்லுாரிகள் திட்டத்தில் கூட, தங்கள் அற்ப அரசியலுக்காக பொய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியது திமுக. இதுபோன்ற சதி திட்டங்களால், மக்களுக்காக உழைக்கும் நேர்மையான தலைவரான எடப்பாடி பழனிசாமியை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை தெரிந்து கொள்ளட்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் தவிர்த்த நூல் ஒன்று உள்ளது... அது ‘பூணூல்’..! ஐயங்கார் வீட்டில் பிறந்த கமலின் சமத்துவம்
தோல்வி பயத்தால் தொகுதி மாறும் செந்தில் பாலாஜி..? கோவை தான் அடுத்த டார்கெட்.. பக்கா ஸ்கெட்ச் போட்ட திமுக