
காவிரி இறுதி தீர்ப்பு தொடர்பாக ஆலோசிக்க திமுக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததும், அலறியடித்து அதற்கு முன்னதாக அரசு தரப்பில் அனைத்து கட்சி கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி வழக்கில் நடுவர் மன்றம் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கிய 192 டிஎம்சி நீரை 177.25 ஆக உச்சநீதிமன்றம் குறைத்தது. இதுதொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அரசு ஆலோசிக்க வேண்டும் திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் எந்த பதிலும் இல்லாததால், திமுக சார்பில் வரும் 23ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், காவிரி இறுதி தீர்ப்பு தொடர்பாக சட்ட ரீதியான சாத்தியக்கூறுகள் குறித்து சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் ஆலோசித்தார். அதன்பிறகு வரும் 22ம் தேதி, அதாவது திமுக அறிவித்ததற்கு ஒருநாள் முன்னதாக அரசு தரப்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
திமுக கொடுத்த அழுத்தத்தால்தான் இந்த கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். போக்குவரத்து ஊழியர்கள் விவகாரத்தின் போது அரசு தரப்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்தியது. ஆனால் அப்போது அரசு செவிமடுக்காததால் திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது.
அதேபோல போக்குவரத்து கழக சீரமைப்பு தொடர்பாக திமுக நடத்திய ஆய்வின் அறிக்கையை ஸ்டாலின் அரசிடம் வழங்கினார். இப்படியாக அரசை விட திமுக அனைத்து விஷயங்களிலும் ஆதிக்கம் செலுத்துவதாக உணர்ந்ததால் தான் இந்த விவகாரத்திலாவது திமுகவின் முயற்சியை வீழ்த்த வேண்டும் என நினைத்து அனைத்து கட்சி கூட்டத்திற்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.