
நீங்களா நாங்களானு போட்டு பாத்துடுவோம்.. திமுக-அதிமுக மோதல்!! சபாஷ் சரியான போட்டி
காவிரி இறுதி தீர்ப்பு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க முதல்வர் பழனிசாமி தலைமையில் வரும் 22ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் அண்மையில் இறுதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கான நீரை 192 டிஎம்சியிலிருந்து 177.25 டிஎம்சியாக குறைத்தது. 14.75 டிஎம்சி நீர் கர்நாடகாவுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. தமிழகம் சார்பில் முறையான வாதங்கள் முன்வைக்கப்படாடதது தான் இதற்குக் காரணம் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும் என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தினார். ஸ்டாலின் வலியுறுத்தலுக்கு அரசு தரப்பில் பதில் இல்லாததால், வரும் 23ம் தேதி திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்தார்.
இதற்கிடையே, காவிரி இறுதி தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தமிழகத்திற்கான தண்ணீரை குறைத்த உச்சநீதிமன்றம், தனது இறுதி தீர்ப்பில் இன்னும் 15 ஆண்டுகளுக்கு இந்த தீர்ப்பு அமலில் இருக்கும் எனவும் அதுவரை எந்த மேல்முறையீடும் செய்ய முடியாது என தெரிவித்துவிட்டது. இந்நிலையில், காவிரி விவகாரத்தில் சட்ட ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு வரும் 22ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் வரும் 22ம் தேதி தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது.
திமுக சார்பில் வரும் 23ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.