
கடந்த 10 மாத உழைப்பின் வெளிப்பாடு நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிதி நிலை அறிக்கையில் தெரியவரும் என சமூக வலைதளத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதனால் நாளை தாக்கலாகவுள்ள நிதி நிலை அறிக்கையின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் நிதித்துறை அமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருந்தார். இதனைதொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்த பிறகு இடைக்கால நிதி நிலை அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தமிழக அரசின் கடன் சுமை 5.70 லட்சம் கோடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நாளை 2022-23 ஆம் ஆண்டிற்கான திமுக அரசின் முழுமையான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ள நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வரி மறுசீரமைப்பு, சமூக நல திட்டங்கள், யாருக்கு பலன்கள் கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கு பலன்கள் கிடைக்கும் என்று நிதிநிலை அறிக்கை குறித்த தனது கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றார். அதன் வெளிப்பாடு நிதி நிலை அறிக்கையில் எதிரொலிக்கும் என கூறப்படுகின்றது.
தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவு, வணிக வரி, மதுபானம் உள்ளிட்ட வருவாயை பெருமளவு நம்பியுள்ளது. 2017க்கு பின் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாடு அரசு வரிவசூலாக 93,000 கோடி ரூபாய் வருவாய் எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இம்மாதம் இறுதியில் 1 லட்சத்து 5000 கோடியாக வரிவசூல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வணிக வரிவருவாயை பெருக்கும் வகையில் புதிய திட்டங்களுங்கான அறிவிப்புகள் நிதி நிலை அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கபடுகிறது. வரி சீரமைப்பு என்பதற்கான முன்னறிவிப்பாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுபானம், பாலினால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விலை சமீபமாக சற்று உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், மக்களை நேரடியாக பாதிக்காத வகையிலான வரி சீரமைப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்புகள் இருந்தாலும் சமூக நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, மகளிர் உரிமைத் தொகை, மாதந்தோறும் மின் கட்டணம் நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. திமுக அரசின் 10 மாத கால உழைப்பின் வெளிப்பாடு என்ன என்பது நாளை தெரியவரும்