முதலாமாண்டு பி.இ. செமஸ்டர் தேர்வை ஒத்திவையுங்கள்... அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை!!

Published : Mar 17, 2022, 04:53 PM IST
முதலாமாண்டு பி.இ. செமஸ்டர் தேர்வை ஒத்திவையுங்கள்... அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை!!

சுருக்கம்

முதலாமாண்டு பொறியியல் படிப்புப் பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வினை தள்ளி வைக்கவும், ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்தவும் தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

முதலாமாண்டு பொறியியல் படிப்புப் பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வினை தள்ளி வைக்கவும், ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்தவும் தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா மூன்றாவது அலை காரணமாக முதலாமாண்டு பொறியியல் கல்லூரி மாணவ , மாணவியருக்கான வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக நடைபெற்ற நிலையில், அந்த மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வினை இந்த மாதம் 21 ஆம் தேதி முதல் நேரடியாக நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருப்பது கல்லூரி நிர்வாகங்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான கல்லூரிகளில் முதல் பருவத்திற்கான நேரடி வகுப்புகள் 60 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டதாகவும், நவம்பர் மூன்றாவது வாரத்தில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில் அனைத்து மாணவர்களும் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக படிக்க வற்புறுத்தப்பட்டதாகவும், பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் உடனடியாக முதல் பருவத் தேர்விற்கான கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டடதாகவும் அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா விழிப்பு மையமாக செயல்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் நிலைமை இதைவிட மோசமானது என்றும், அவர்களுக்கு 40 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கொரோனா கொடுந்தொற்று காரணமாக, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை முதலாமாண்டு பயிலும் மாணவ, மாணவியர் எழுதாத சூழ்நிலையில், முதலாமாண்டு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியருக்கு வகுப்பறைகளில் படிப்பதற்கு போதுமான நேரம் தரப்படாத சூழ்நிலையில், அவர்களுக்கு நேரடித் தேர்வினை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருப்பது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளதாகவும், பொறியியல் முதலாமாண்டு பயிலும் ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் மாணவ, மாணவியர்களில் பெரும்பாலானோர் படிப்பிற்கான உதவித் தொகையை சார்ந்திருக்கும் ஏழையெளியவர்கள் என்றும், இது அவர்களுக்கு கடினமான தருணம் என்றும் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

மேலும், பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியருக்கான எட்டாம் பருவத் தேர்வைத் தவிர அனைத்து பருவத் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்த சூழ்நிலையில், அனைத்து பருவத் தேர்வுகளும் வகுப்பறைகளில் என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும், பருவத் தேர்வுகளை ஒரு மாதத்திற்கு தள்ளிவைத்து, ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த வேண்டுமென்றும் கல்லூரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. நேரடி பருவத் தேர்விற்கு தயாராவதற்குத் தேவையான கால அவகாசம் மாணவ, மாணவியருக்கு இல்லாத நிலையில், பொறியியல் பயிலும் மாணவ, மாணவியரின் முதல் பருவத் தேர்வினை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்கவும், தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். இந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தினைக் கருத்தில் கொண்டு, அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசிற்கு உண்டு. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, அனைத்துத் தரப்பினரிடமும் கலந்து ஆலோசித்து, பொறியியல் முதலாமாண்டு மாணவ, மாணவியரின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?