மத்திய மண்டலத்தில் திமுகவின் அசுர வளர்ச்சி!! ஏசியா நெட் நியூஸின் சர்வே முடிவுகள்

By karthikeyan VFirst Published Aug 4, 2018, 6:34 PM IST
Highlights

தமிழ்நாட்டின் மத்திய மண்டலத்தில் திமுக அசுர வளர்ச்சி அடைந்திருப்பதை சர்வே முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. 

தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு நிகரான அரசியல் மாற்று இல்லாமல் இருந்த நிலையில், கருணாநிதியின் ஓய்வு, ஜெயலலிதாவின் மரணம் ஆகிய காரணங்களின் எதிரொலியாக திரையுலக சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியல் பிரவேசம் எடுத்துள்ளனர். 

அடுத்துவரும் மக்களவை தேர்தல் அல்லது சட்டமன்ற தேர்தல் என எந்த தேர்தலாக இருந்தாலும் பலமுனை போட்டி நிலவ போவது உறுதி. இந்நிலையில், தமிழக மக்களின் பிரச்னைகள் மற்றும் அவர்களின் ஆதரவு எந்த கட்சிக்கு இருக்கிறது என்பதை அறிய AZ ரிசர்ச் நிறுவனம் தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் 24ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 11,691 பேரிடம் கருத்து கேட்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

அதனடிப்படையில், கொங்கு மண்டல மக்களின் ஆதரவு குறித்து கடந்த பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் மத்திய மண்டல மக்களின் ஆதரவு, எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு எந்தளவிற்கு இருக்கிறது என்பதை பார்ப்போம்..

"

மத்திய மண்டலம்:

புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது மத்திய மண்டலம்.

மத்திய மண்டலத்தில் வசிக்கும் சமூகத்தினர்:

மத்திய மாவட்டங்களில் வன்னியர், முத்தரையர், முக்குலத்தோர், தலித் ஆகிய சமூகத்தினர் பரவலாக உள்ளனர். 

மக்களின் பிரச்னைகள்:

மத்திய பிராந்தியம் காவிரி டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கியது என்பதால், பாசனத்திற்கான காவிரி நீர் மற்றும் குடிநீர் ஆகியவை இப்பகுதி மக்களின் பிரதான பிரச்னைகளாக உள்ளன.

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என 20% பேரும் கர்நாடகாவிடமிருந்து உரிய காவிரி நீரை விவசாயத்திற்கு பெற்றுத்தர வேண்டும் என 10% பேரும் கோரிக்கை விடுத்துள்ளனர். விலைவாசி உயர்வு, லஞ்சம் மற்றும் ஊழல், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றையும் மத்திய மாவட்ட மக்கள், தங்களது பிரச்னைகளாக குறிப்பிட்டுள்ளனர். 

வாக்கு பகிர்வு:

முத்தரையர் சமூக மக்களில் 29 சதவிகித்தினரின் ஆதரவு அதிமுகவிற்கும் 28 சதவிகிதத்தினரின் ஆதரவு திமுகவிற்கும் உள்ளது. ரஜினிகாந்திற்கு 8% மற்றும் கமல்ஹாசனுக்கு 7% முத்தரையர் சமூகத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வன்னியர் சமூகத்தினரின் அரசியல் கட்சிகளுக்கான ஆதரவு குறித்து மேற்கு மண்டலத்தில் பார்த்தோம். முக்குலத்தோர் சமூகத்தினர் மத்திய மாவட்டங்களை விட தென்மாவட்டங்களில் பெருவாரியாக இருப்பதால், அவர்களது ஆதரவு யாருக்கு என்பது குறித்து தென் மாவட்டங்கள் குறித்த அலசலில் பார்ப்போம்.

ஒட்டுமொத்தமாக மத்திய மாவட்டங்களை பொறுத்தமட்டில் திமுக அதிகபட்சமாக 36% ஆதரவை பெற்றுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பெற்றதைவிட இது, 14% அதிகம். மத்திய மண்டலங்களில் திமுகவிற்கான ஆதரவு பெருகியுள்ளது. 

அதேநேரத்தில், அதிமுகவிற்கான ஆதரவு கடுமையாக சரிந்துள்ளது. 2014 மக்களவை தேர்தலில் மத்திய மண்டலத்தில் 47% வாக்குகளை பெற்ற அதிமுகவிற்கு வெறும் 21% மக்களே தற்போது ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிமுக 21% ஆதரவை மட்டுமே பெற்றுள்ளது. ரஜினிகாந்த் 12% ஆதரவை பெற்றுள்ளார். ரஜினிக்கு கிடைத்துள்ள ஆதரவில் 6ல் ஒரு பங்குதான் கமல்ஹாசனுக்கு கிடைத்துள்ளது. 

மத்திய மண்டலத்தில் அதிமுக வீழ்ச்சியையும் திமுக அசுர வளர்ச்சியையும் அடைந்திருப்பதை சர்வே முடிவுகள் காட்டுகின்றன. 

click me!