Election Reform : இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கா.? விரைவில் வருது வலுவான ஆப்பு.!

By Asianet TamilFirst Published Dec 16, 2021, 9:22 AM IST
Highlights

இனி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் எந்தக் கட்டிடத்தையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளலாம். திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் என எந்த ஒரு கட்டிடத்தையும் தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

ஒரே நபர் இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதைத் தடுக்கும் வகையில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்க வழி வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்தும் வகையில் தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல பரிந்துரைகளை சட்ட கமிஷனுக்கு அனுப்பியது.  நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் நிலையில், தற்போது அதில் சில அம்சங்களுக்கு அனுமதி வழங்கும் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மசோதா தேர்தல் தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்கிறது. அந்த மசோதாவில் உள்ள தேர்தல் சீர்திருத்தங்களின் முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆதார் - வாக்களர் அடையாள அட்டை இணைப்பு கட்டாயமாக்கப்படாது. அது தனிநபர் விருப்பத்துக்கு உட்பட்டது. ஆனாலும் ஒரே நபர் வெவ்வேறு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதை தடுக்கும் வகையில் ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதியை மையமாக வைத்து18 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் படிட்யலில் சேர்க்க முடியும். இனி ஆண்டுக்கு 18 வயது நிரம்பிய நபர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க ஆண்டில் 4 முறை வாய்ப்பு வழங்கப்படும். இது இளம் வாக்காளர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்க வழிவகுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதெபோல தேர்தல் வாக்குப்பதிவுகள் பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது.  ஆனால், இனி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் எந்தக் கட்டிடத்தையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளலாம். திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் என எந்த ஒரு கட்டிடத்தையும் தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம். அங்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்க மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இந்த தேர்தல் சீர்திருத்த மசோதா நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்பட உள்ளது.

click me!