
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி அளித்துள்ளார். தமிழக அரசின் 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 18 ஆம் தேதி தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 2 ஆவது காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பஜ்ஜெட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் சிலர் விமர்சனமும் செய்துள்ளனர். இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மீதான 2 ஆவது நாளாக பொது விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது தமிழக பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகள் பற்றிய விமர்சனம் அதிமுகவினரால் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர் ஒரு பெரிய பட்டியலை வரிசைப்படுத்தி, இதையெல்லாம் தேர்தல் அறிக்கையிலே சொன்னீர்களே, ஏன் செய்யவில்லை, ஏன் செய்யவில்லை என்று கேட்கிறார். நீங்கள் தொடர்ந்து இரண்டு முறை, அதாவது 10 வருடங்கள் ஆட்சியில் இருந்தீர்கள். நீங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எல்லாம் முழுமையாக செய்து முடித்து விட்டீர்களா? அப்படிச் செய்து முடித்திருந்தால், சொல்லுங்கள்.
பல வாக்குறுதிகளை நீங்கள் அந்த 10 வருடங்களில் நிறைவேற்றவே இல்லை. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அது மக்களுக்கும் நன்றாகத் தெரியும். நான் இப்போது சொல்கிறேன். நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கக் கூடிய வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை, அதிலும் குறிப்பாக இந்த 10 மாதங்களில், நாங்கள் செய்திருக்கக் கூடிய சாதனைகளைப் போல் எந்த ஆட்சியிலும் செய்யவில்லை என்பதை நான் உறுதியோடு சொல்ல முடியும். எனவே, விரைவிலே, நீங்கள் என்னென்ன வாக்குறுதிகளைக் கேட்டிருக்கிறீர்களோ, அவற்றையெல்லாம் பட்ஜெட்டிலும் சொல்லியிருக்கிறோம். எனவே, நிச்சயமாக, உறுதியாக, படிப்படியாக அவை நிறைவேற்றப்படும். அதுதான் எங்களுடைய இலட்சியம், அதுதான் எங்களுடைய கொள்கை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.