“அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் - அதிமுக : தஞ்சை - இழுபறி..!!! பரபரப்பு சர்வே முடிவுகள்”

First Published Nov 17, 2016, 11:44 PM IST
Highlights


வரும் 19ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்கள் அதிமுக திமுக கட்சியினருக்கு இடையே வாழ்வா,? சாவா? என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின் கடந்த 30 வருடங்களில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்யாத முதல் தேர்தல் இது.

இந்த வித்தியாசமான சூழ்நிலையில், அதிமுக தரப்பில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, முழு வீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சும்மா விடுவார்களா திமுகவினர். தஞ்சையில் சுப்புலட்சுமி ஜெகதீசன், டி.ஆர்.பாலு, அரவக்குறிச்சியில் எ.வ.வேலு, திருப்பரங்குன்றத்தில் அன்பில்.மகேஷ் ஆகியோரது தலைமையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

இந்தநிலையில், வழக்கம்போல பல்வேறு ஊடகங்களும் கருத்துக்கணிப்புகளை நடத்தியுள்ளன. இதில் பிரபல தொலைக்காட்சிகள் மற்றும் வார இதழ்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவகள் ஓரளவிற்கு ஒத்த முடிவுகளுடனேயே வந்துள்ளன.

அரவக்குறிச்சி

செந்தில்பாலாஜி  மற்றும் கே.சி.பழனிச்சாமிக்கிடையே கடும் போட்டி நிலவினாலும், தொகுதியில் பெரும்பாலும் உள்ள திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த முஸ்லீம்கள் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மொத்தமாக மாறியுள்ளது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

மேலம், செந்தில்பாலாஜியின் சொந்தபலம் மற்றும் அதிமுகவின் பண பலம் ஆகியவற்றை அடுத்து குறைந்தது 20ஆயிரம் வாக்குகளுக்கு மேல் அதிகம பெற்று அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் போஸ், மற்றும் திமுகவின் டாக்டர்.சரவணனுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் பணிகள் மேற்கொண்டாலும், சில அதிருப்திகள் இருக்கத்தான் செய்கின்றன.

இருந்தாலும், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அப்பகுதி அமைச்சர்கள் அதிக ஓட்டுகள் வாங்கி காண்பிக்க வேண்டும் என்ற டார்கெட் அடிப்படையில் வேலை செய்யததாலும், அதிமுகவின் பாரம்பரிய ஓட்டுக்களும் ஏ.கே.போஸ் வெற்றி பெற செய்யும் என முடிவுகள் தெரிவிக்கின்றன.

தஞ்சாவூர்

திமுகவின் டாக்டர்.அஞ்சகம் பூபதிக்கும், அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ.ரங்கசாமிக்கும் இடையே தான் போட்டி. அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் பணிகள் வேகமாக நடந்தாலும், திமுக வின் அஞ்சுகம் பூபதி என்னவோ டஃப் ஃபைட் கொடுக்கிறார்.

அடிப்படையில் திமுக வாக்கு வங்கி சதவிகிதம் அதிகம் உள்ள தஞ்சாவூர் தொகுதியில் அஞ்சுகம் பூபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நல்ல செல்வாக்கு உள்ளதால் அதிமுக திமுகவினருக்கிடையே உள்ள வெற்றி சதவிகிதம் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

இதனால், யாருக்கு வெற்றி என்று உறுதியாக கூற முடியாத நிலை தஞ்சாவூரில் ஏற்பட்டுள்ளது. இழுபறி நிலையே இறுதி வரை நீடிக்கும் என தெரிகிறது.

பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின் முடிவுகளின் படி 2 தொகுதிகளில் அதிமுக எளிதில் வெற்றியும், தஞ்சாவூர் தொகுதியில் கடும் போட்டிக்கு பிறகு அதிமுக வெற்றி பெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!