
இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக அக்டோபர் 5 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சசிகலா, தினகரன், மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம்ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரு தரப்பினரும் அன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் இரு தரப்புக்கும் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக., இரண்டாகப் பிரிந்தது. ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கக் கோரி ஓ.பி.எஸ் அணி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தது. அதைத் தொடர்ந்து இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி அணியினர் இணைந்தனர். இந் நிலையில் மீண்டும் இரட்டை இலைச் சின்னத்தை மீட்க அதிமுக.,வினர் முடிவு செய்தனர். இந்நிலையில் சின்னம் தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கக் கோரி, வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதை அடுத்து வரும் செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் இரு தரப்பும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வரும் அக்டோபர் 5ஆம் தேதி, இந்த விவகாரத்தில் இறுதி விசாரணை நடைபெறும் என்றும், 2016 டிசம்பர் 5ஆம் தேதிக்குப் பின்னர் கூடிய செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பிக்கும் படியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.