மோடிக்காக தேர்தல் தேதியை இன்னும் அறிவிக்கவில்லையா ? தேர்தல் ஆணையத்தை வறுத்தெடுக்கும் எதிர்க் கட்சிகள் ?

By Selvanayagam PFirst Published Mar 7, 2019, 9:18 PM IST
Highlights

2014 மக்களவைத் தேர்தல் தேதியை அந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதியே தேத்ல் ஆணையம் அறிவித்துவிட்ட நிலையில் இந்த தேர்தல் தேதியை ஏன் இன்னும் அறிவிக்கவிலலை என கேள்வி எழுப்பியுள்ள எதிர்கட்சிகள்,  பிரதமர் மோடி இன்னும் சில திட்டங்களை அறிவிப்பதற்காக தேர்தல் ஆணையம் காத்திருக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் இந்த 17 ஆவது மக்களவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இதுவரை அறிவிக்கவில்லை.

இதையடுத்து தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் என்று அறிவிக்கும் என எதிர்கட்சிகள் காத்திருக்கின்றன. ஆனால் பிரதமர் மோடி இன்னும் சில திட்டங்களை அறிவிக்க உள்ளதால் தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்க காலதாமதம் செய்வதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அகமது பட்டேல் இது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியின் சுற்றுப் பயண திட்டத்தையொட்டி தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்குமா என கிண்டல் செய்துள்ளார்.

பிரதமர் மோடி அரசு விழாக்களை அரசியல் விழாக்களாக நடத்தி வருவதாகவும், தொலைக்காட்சி, ரேடியோ, பத்திரிக்கைகள் போன்றவற்றில் மிகப் பிரமாண்டமாக பாஜக மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் செய்து வருவதாகவும் அகமது பட்டேல் குற்றம் சாட்டியுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவையும் அகமது பட்டேல் விட்டு வைக்கவில்லை. அவரது தலைமையில் ஒரு குழு ஜம்முவுக்கு விசிட் அடித்தது. கடந்த செவ்வாய் கிழமை ஆய்வு முடித்து விட்டு வந்ததும் தேர்தல் தேதியை  அறிவிப்பதாக இருந்தது. 

ஆனால் அது நடக்கவில்லை. ஏனென்றால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் அப்படி வந்தால் மோடி மிச்சம் மீதி உள்ள திட்டங்களை அறிவிக்க முடியாது என்பதைத்தான் இது காட்டுகிறது என அகமது பட்டேல் குற்றம் சாட்டியுள்ளார்.

வரும் ஜுன் 3 ஆம் தேதியுடன் 16 ஆவது நாடாளுமன்றம் முடிவுக்கு வருகிறது. தற்போது தேர்தல் ஆணையம் பல கட்டங்களாக தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது. மார்ச் 8 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால்  அதையடுத்து மூன்று வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மே 15 ஆம் தேதிக்குள் அனைத்து தேர்தல்களையும் நடத்தி முடிக்க வேண்டும் .

கடந்த  2014 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் மே 12 ஆம் தேதிக்குள்  தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. மே 16 –ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 26 ஆம் தேதி  மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.

2009 ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 16 முதல் மே 13 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. மே 16 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 20 முதல் மே 10 ஆம் தேதிக்குள் தேர்தல் நடைபெற்றது. 4 கட்டங்களாக  நடைபெற்ற தேர்தல் முடிவுகள் மே 13 –ல் அறிவிக்கப்பட்டன.

இதே போல் 1999 ஆம் ஆண்டு  மே 4 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஆனால் 1999 ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாயி 6 மாதங்களுக்கு முன்பாக தேர்தல் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படிப் பாத்தாலும்  இந்த 2019 ஆம் ஆண்டு பொதுக் தேர்தல் தாமதமாகி வருகிறது என்பதே உண்மை.

click me!