வாக்களிக்க வருபவர்களுக்கு இலவச கார் சேவை... தேர்தல் ஆணையத்தின் அதிரடி ஏற்பாடு...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 5, 2021, 1:15 PM IST
Highlights

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க மற்றொரு சிறப்பு ஏற்பாட்டை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை  வாக்குப்பதிவு நடைபெற உள்ளது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கடைசி ஒருமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதில் பதற்றமான 10,813 வாக்குச்சாவடிகள், மிக பதற்றமான 537 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 3.09 கோடி ஆண்கள், 3.19 கோடி பெண்கள், 7,192 திருநங்கைகள் ஆகியோர் நாளை வாக்களிக்க உள்ளனர். கொரோனா காலக்கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 

கொரோனா தொற்றின் பரவல் காரணமாக 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆகியோர் வீட்டில் இருந்தே தபால் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க மற்றொரு சிறப்பு ஏற்பாட்டை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. 

அதன்படி, ஏப்ரல் 6ம் தேதி வாக்களிக்க உள்ள மாற்றுத்திறானளிகள், முதியவர்களுக்கு இலவச கார் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி,கோவை ஆகிய மாநகரங்களில் ஊபர் கார் சேவை நிறுவனத்துடன் தேர்தல் ஆணையம் இந்த இலவச சேவையை வழங்க உள்ளது.  பயனாளர் வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு சென்று திரும்பும் வகையில் குறைந்தபட்சம் 5 கி.மீ.க்கு 100% கட்டண சலுகை வழங்கப்பட உள்ளது. வாக்காளர்கள் தங்களுடைய செல்போனில் உள்ள ஊபர் செயலி வழியாகவும் இலவச சேவையை  பெறலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

click me!