"அந்நிய செலாவணி வழக்கில் கேள்விகளை முன்கூட்டியே தர வேண்டும்" - சசிகலா கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

First Published Jun 12, 2017, 11:47 AM IST
Highlights
egmore court rejects sasikala demand


அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கேட்கப்படும் கேள்விகளை முன்கூட்டியே தரவேண்டும் என்ற சசிகலாவின் கோரிக்கை மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கடந்த 1996 ஆம் ஆண்டு அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை 7 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த 2015-ம் ஆண்டு இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் சசிகலா மீதான ஒரு வழக்கிலிருந்தும், தினகரன் மீதான 2 வழக்குகளிலிருந்தும், பாஸ்கரன் மீதான ஒரு வழக்கிலிருந்தும் அவர்களை விடுவித்து உத்தரவிட்டது.

எழும்பூர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறையினர்  உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்தும், எழும்பூர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தவும் உத்தரவிட்டது.

இதையடுத்து சசிகலா, டிடிவி தினகரன் மீதான வழக்கு விசாரணை எழும்பூர் பொருளாதார குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதைதொடர்ந்து அந்நிய செலவாணி மோசடி வழக்கில் கேட்கப்படும் கேள்விகளை முன்கூட்டியே தரவேண்டும் என சசிகலா தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கேள்விகளை முன்கூட்டியே தரக்கூடிய வழக்கம் இல்லை என கூறி சசிகலாவின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

click me!