திருமாவளவனை படித்த இளைஞர்கள் நம்புவதில்லை..? அன்புமணிக்கு திருமாவளவன் கொடுத்த பதிலடி.

By Ezhilarasan BabuFirst Published Apr 12, 2021, 11:00 AM IST
Highlights

நான் வெற்றி பெற்றால் போதும் என்று அப்பாவி மக்களைத் தூண்டிவிட்டு அவர்களை இரையாக்கலாம் என்று அப்பாவி மக்களை தூண்டிவிட்டு மோதலுக்கு தூண்டிவிட்டு அவர்களை இரையாக்கலாம் என்ற எண்ணம் இருந்தால் அந்த எண்ணம்  எவ்வளவு கல்வி பெற்றிருந்தாலும் கூட அது இழிவான எண்ணம் தான். இழிவான புத்தி தான். 

திருமாவளவனை படித்த இளைஞர்கள் நம்புவதில்லை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ள கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் .திருமாவளவன் சமூக வலைதள நேரலையில் பதிலடி கொடுத்துள்ளார். அதன் விவரம்:  அன்புமணி ராமதாஸ் என் மீது தனிநபர் விமர்சனம் வைத்துள்ளார். அவர் என்னைக் கொச்சைப்படுவதாக எண்ணிக்கொண்டு படிப்பதற்கு கல்வியை நுகர வாய்ப்பில்லாத இளைஞர்களை கொச்சைப்படுத்துகிறார். படித்தவர்கள் படிக்காதவர்களை விட மேலானவர்கள் என்பதைப் போன்று உளவியலின் அடிப்படையில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். படித்தவர்கள் ஆதரித்தால் தான் அவர்கள் உயர்ந்தவர்கள். படிக்காதவர்கள் ஆதரித்தால் அவர்கள் தாழ்ந்தவர்கள் என்கிற கருத்து அதிலே தொனிக்கிறது. 

எம்ஜிஆர் என்ன படித்தார். ஜெயலலிதா என்ன படித்தார். காமராஜர் படித்தது என்ன. முத்தமிழறிஞர் கலைஞர் படித்தது என்ன? ஆனால் இவர்களைத் தூக்கிவைத்து கொண்டாடிய மக்கள் பெரும்பாலானோர் பள்ளிக்கூடத்தின் வாசலைக்கூட மிதிக்க வாய்ப்பில்லாதவர்கள் தான். ஆடுமாடுகளை மேய்க்கக்கூடிய அடித்தட்டு மக்கள் தான். வயல்வெளிகளில் விலா எலும்பு உடையஉடைய உழைக்கக்கூடிய பாட்டாளிகள் தான். உழைக்கிற மக்கள் படிக்க வாய்ப்பில்லாதவர்கள் தரம் தாழ்ந்தவர்களா? கல்வியைப் பெற்றவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெற்றவர்கள் என்று பொருள். கல்வி பெற இயலாதவர்கள் அதற்கான  வாய்ப்பைப் பெறாதவர்கள் என்றுதான் பொருள். கல்வி பெற்றவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்கிற மனோநிலை என்பதே ஒரு பாகுபாடு உளவியல் தான். படித்தவர்கள் படிக்காதவர்கள் என்கிற Discrimination அதிலே இருக்கிறது. 

1990 களில் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு என் பெயருக்கு பின்னால் இரா.திருமாவளவன், M.A.,B.L., என்று தோழர்கள் போடுவார்கள். அப்போதே நான் அதை போடுவதை எடுக்கச்சொல்வேன். படித்ததை தானே போடுகிறோம் என்று தோழர்கள் சொல்வார்கள். நாம் பணியாற்றுகின்ற களம் உழைக்கும் மக்களின் களம். ஆடுமாடு மேய்க்கக் கூடியவர்களாக கல்லுடைப்பவர்களாக ஆட்டோ சைக்கிள் ரிக்சா ஓட்டுபவர்களாக மூட்டை சுமப்பவர்களாக பார வண்டி இழுப்பவர்களாக, கட்டிடத் தொழிலாளர்களாக மீனவர்களாக கருப்பங்காட்டில் கிடந்துக்காயும் விவசாயக் கூலிகளாக இருக்கிறார்கள். அவர்களிடத்திலே திருமாவளவன் M.A.,B.L., என்று போட்டுக்கொள்வது தம்பட்டம் அடிப்பதாக இருக்கும். 

அவர்களுக்கும் நமக்கும் ஒரு இடைவெளி ஏற்படுவதாக அமையும். ஆகவே என் பெயருக்குப் பின்னால் பட்டத்தை ஒருபோதும் போடக்கூடாதென்று தொடக்கத்தில் இருந்தே கடைபிடித்து வந்தவன். அவ்வாறு போடும் தோழர்களைக் கடிந்து கண்டித்தவன். 1999 வரை என்னுடைய படத்தைக்கூட போட்டுக்கொள்ள அனுமதித்ததில்லை. படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் ஒரு இடைவெளியை ஏற்படுத்திவிடக் கூடாது என்கிற எண்ணம் எனக்கும் யொரும் சொல்லித்தரவில்லை. எனக்குள் இருந்த உணர்வு அது. அப்படி போட்டுக்கொண்டால் நாம் உழைக்கின்ற மக்களிடையே ஒரு இடைவெளி உண்டாகும் என்று எனக்கு யாரும் சொன்னதில்லை. நானே எடுத்துக்கொண்ட முடிவு அது.

படித்தவர்களை விட படிக்க வாய்ப்பில்லாதவர்களிடம் தான் நான் அதிகம் கருத்துக் கேட்பதுண்டு. நான் எழுதுகிற முழக்கங்களில் எது உங்களுக்கு பிடிக்கிறது என்று கேட்பேன். நான் எழுதுகிற கவிதைகளில் எது உங்களுக்கு புரிகிறது என்று கேட்பேன். அவர்கள் எதை தேர்வு செய்கிறார்களோ அதைத்தான் நான் துண்டறிக்கையிலே சுவரொட்டியிலே அச்சிடுவேன். படிக்காதவர்களை அலட்சியப்படுத்துவது கொச்சைப்படுத்துவது துச்சமென நினைப்பது மிக மோசமான ஆதிக்க உணர்வு கொண்ட உளவியல். அது தலைக்கணம், கர்வம் சார்ந்த உளவியல். 

கல்வி பெறுவதற்கு வாய்ப்பில்லாதவர்கள் எந்தவகையிலும் தாழ்ந்தவர்கள் இல்லை. இழிவானவர்கள் இல்லை. படித்திருந்தும் சாதி புத்தி இருந்தால் அவன் தான் இழிவானவன். படிப்பதற்கு வாய்ப்பில்லாமல் சாதிஒழிப்பே மக்கள் விடுதலை என்று சொன்னால் அவன் தான் உயர்ந்தவன். கல்வி பெறுவதற்கு வாய்ப்பில்லாத நிலையிலும் சமத்துவத்தை அவன் உள்வாங்குகிறான் என்றால் அவன் தான் மனிதருள் உயர்ந்த மாணிக்கம். டாக்டர் எஞ்சீனியர் பி.எச்டி என்று படித்திருந்தாலும் கூட சனாதன புத்தி சாதி புத்தி மதவெறி சாதிவெறி சுயநலம் தான் உண்டு தன் குடும்பம் உண்டு தன்னுடைய பெண்டு பிள்ளைகள் பிழைத்தால் போதும் யாரை வேண்டுமானாலும் ஏய்க்கலாம். யாரை வேண்டுமானாலும் எத்திப்பிழைக்கலாம் யார் எக்கேடு கெட்டால் என்ன. நான் வெற்றி பெற்றால் போதும் என்று அப்பாவி மக்களைத் தூண்டிவிட்டு அவர்களை இரையாக்கலாம் என்று அப்பாவி மக்களை தூண்டிவிட்டு  மோதலுக்கு தூண்டிவிட்டு அவர்களை இரையாக்கலாம் என்ற எண்ணம் இருந்தால் அந்த எண்ணம்  எவ்வளவு கல்வி பெற்றிருந்தாலும் கூட அது இழிவான எண்ணம் தான். 

இழிவான புத்தி தான். எனவே நாம் படித்து பெற்றிருக்கிற பட்டம் என்பது நம்மை உயர்த்திவிடாது. நாம் கற்றிருக்கிற கல்வி சகமனிதர்களை சமத்துவமாக அணுகுவதற்கு பயன்பட்டால் தான் அந்தக் கல்வி உயரும். வேலைவாய்ப்புக்காக பெறுகிற பட்டம் வருமானத்திற்காக படிக்கிற பட்டம் சமூகத்தில் நான் படித்துள்ளேன் என்று காட்டிக்கொள்வதற்கான பட்டம் எந்த வகையிலும் உயர்ந்ததில்லை. எனவே என்னைக் கொச்சைப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு கல்வி பெறுவதற்கு வாய்ப்பில்லாத ஒட்டுமொத்த உழைக்கும் சமூகத்தையே இழிவுபடுத்துகிற ஒரு உளவியலை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.  

 

click me!