முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா ! ஜுலை 31 ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு !!

By Selvanayagam PFirst Published Jul 26, 2019, 7:39 PM IST
Highlights

கர்நாடக அமைச்சராக  4-வது முறையாக எடியூரப்பா இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.வரும் 31 ஆம் தேதிக்குள் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என ஆளுநர் வாஜுபாய் வாலா கெடு விதித்துள்ளார். 
 

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, பாஜக  சக்தி வாய்ந்த தலைவராக இருந்து வருகிறார்.  லிங்காயத் சமூகத்தை சேர்ந்த அவர் கடந்த 1943-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகாவில் உள்ள பூகனகெரே கிராமத்தில் பிறந்தார். 

1965-ம் ஆண்டு சமூக நலத்துறையில் கிளார்க் பணியை தொடங்கினார். பிறகு அந்த அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு, சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுராவுக்கு சென்றார். அங்குள்ள ஒரு அரிசி ஆலையில் பணிக்கு சேர்ந்தார்.

1967-ம் ஆண்டு மைத்ரிதேவி என்பவரை அவர் திருமணம் செய்தார். அவர் அந்த அரிசி ஆலை உரிமையாளரின் மகள் . 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு எடியூரப்பாவின் மனைவி இறந்தார். 1972-ம் ஆண்டு சிகாரிபுரா டவுன் பஞ்சாயத்து கவுன்சிலராகவும், 1975-ம் ஆண்டு அதே டவுன் பஞ்சாயத்தின் தலைவராகவும் எடியூரப்பா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நெருக்கடி காலத்தில் சிறையில் தள்ளப்பட்டார். 1985-ம் ஆண்டு சிவமொக்கா மாவட்ட பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட அவர், 1988-ம் ஆண்டு கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். 

முதல் முறையாக அவர் 1983-ம் ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994-ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட அவர், 1999-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். அதன் பிறகு அவர் கர்நாடக மேல்-சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

2004-ம் ஆண்டு தரம்சிங் முதலமைச்சராக இருந்தபோது, எதிர்க்கட்சி தலைவராக எடியூரப்பா பணியாற்றினார். அந்த ஆட்சியில் திடீரென பாஜக  மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. 

இதனால் தரம்சிங் முதலமைச்சர்  பதவியை இழந்தார். கூட்டணி ஆட்சியில் எடியூரப்பா துணை முதலமைச்சராக  பணியாற்றினார். ஒப்பந்தப்படி 20 மாதங்களுக்கு பிறகு எடியூரப்பா முதலமைச்சர்  பதவியை ஏற்றார். ஆனால் 7 நாட்களில் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

2008-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்று 3 ஆண்டுகள் பணியாற்றினார். கனிம சுரங்க முறைகேடு புகார் எழுந்ததை அடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று, பெரும்பான்மை எண்ணிக்கைக்கு அருகில் வந்தது. ஆனால் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயன்றது. அப்போது பெரும்பான்மை இல்லாதபோதும், அவசரகதியில் எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் மூன்றே நாட்களில் அவர் பதவியை இழந்தார். இது பா.ஜனதாவுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது.

இதையடுத்து குமாரசாமி அரசில் இடம் பெற்ற 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கடந்த 23-ந் தேதி கவிழ்ந்தது.இதையடுத்து எடியூரப்பா இன்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். வரும் 31 ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என ஆளுநர் கெடு விதித்துள்ளார்.

click me!