தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கிய எடப்பாடியார்..!! நெகிழ்ந்து பாராட்டும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 15, 2020, 11:08 AM IST
Highlights

மாநில பாடத்திட்டத்தில் தேர்வுவைத்தால் அரசுபள்ளி மாணவர்கள் முதலிடம் பிடிப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதனால் நீட் தேர்வே கூடாது என்பதல்ல, நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமல்படுத்திய பிறகு தேர்வு வைப்பதுதான் சமூக நீதியாகும்.

மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியிருப்பது வரவேற்புக்குரியது என்றும், இதனால் அரசுப் பள்ளிகளில்  மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :- மருத்துவபடிப்பில் சேர நீட் தேர்வில் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் முடிவை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. சமீபகாலமாக அரசுபள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கானல் நீராக இருந்துவருகிறது. நீட் தேர்வு வந்தபிறகு அரசுபள்ளியில் படித்த மாணவர்களில் அதிகபட்சம் நான்கு பேருக்கு மேல் இடம் கிடைக்காதது வேதனையளிக்கிறது. 

 

மாநில பாடத்திட்டத்தில் தேர்வுவைத்தால் அரசுபள்ளி மாணவர்கள் முதலிடம் பிடிப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதனால் நீட் தேர்வே கூடாது என்பதல்ல, நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமல்படுத்திய பிறகு தேர்வு வைப்பதுதான் சமூக நீதியாகும். அதுவரை அந்தந்த மாநிலங்களே மருத்துவ சேர்க்கை நடத்திட அனுமதிக்க வேண்டும். தற்போதுள்ள நிலையில்  நீட் தேர்வில்  7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் வருடத்திற்கு சுமார் 250 அரசுபள்ளி மாணவர்கள் மருத்துவபடிப்பில் சேருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக11 மருத்துவ கல்லூரிகள் தொடங்க இருப்பதால் எதிர்காலத்தில் மருத்துவபடிப்பில் அரசுபள்ளி மாணவர்கள் அதிகம் இடம்பிடிப்பார்கள். அரசுபள்ளியை நோக்கி பெற்றோர்கள் படையெடுப்பார்கள். மாணவர்சேர்க்கை அதிகரிக்கும். 

நீட் தேர்வில் அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு வழங்கிய மாண்புபிகு. தமிழக முதல்வர்  அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், அரசுபள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படுவது வரவேற்புக்குரியது. அப்பயிற்சி பதினோராம் வகுப்பிலிருந்து தொடங்குவதற்கு ஆவனசெய்தும், அரசுபள்ளி மாணவர்களுக்கு அனைத்து உயர்கல்வி ,தொழில்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும் இச்சலுகை நீட்டிக்க ஆவனசெய்யும்படி மாண்புமிகு. முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!