குஜராத் மாநிலத்தில் தமிழ் பள்ளியை பாதுகாத்த எடப்பாடியார்: போராட்டத்தின் வெற்றி என மார்தட்டும் வாலிபர் சங்கம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 25, 2020, 11:29 AM IST
Highlights

தற்போது குஜராத் தமிழ் மக்களின் எண்ணிக்கை 20,000 பேர் இருப்பதாக அறிகிறோம். மேற்கண்ட அகமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளியில் 31 மாணவர்கள் மட்டுமே தற்போது கல்வி பயில்வதாக கூறி பள்ளியை மூட குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது. 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜக மாநில அரசு மூடிய தமிழ் பள்ளியை தமிழக அரசு நிர்வகிக்கும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  தமிழ் பள்ளியை தொடர்ந்து நடத்த கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என்றும் அச்சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் என் ரெஜிஸ் குமார்,  மாநிலச் செயலாளர் எஸ். பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தமிழ் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இது 81 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. 1920 ஆம் ஆண்டுகளில் துவங்கப்பட்ட ஆலைகளில் பணிக்கு சென்ற தமிழ் மக்கள் பல்லாண்டுகளாக அகமதாபாத்தில் வசித்து வருகின்றனர். ஆரம்பத்தில் சுமார் 12,000 பேர் இருந்துள்ளனர். தற்போது குஜராத் தமிழ் மக்களின் எண்ணிக்கை 20,000 பேர் இருப்பதாக அறிகிறோம். மேற்கண்ட அகமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளியில் 31 மாணவர்கள் மட்டுமே தற்போது கல்வி பயில்வதாக கூறி பள்ளியை மூட குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 23 அன்று மதியம் 12 மணிக்குள் மாணவர்கள் மாற்று சான்றிதழ் பெற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதனால் தமிழ் வழிக்கல்வி பயிலும் குஜராத்தை சேர்ந்த தமிழ் வாழ் மக்களின் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 15 நாட்களுக்கு மேலாக தமிழ் பள்ளியை பாதுகாக்க குஜராத் வாழ் தமிழ் மக்கள் போராடி வருகின்றனர். தமிழ் பள்ளியை மூடக்கூடாது, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கையை முன்வைத்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் போராட்டம் நடத்தியது. இதன் விளைவாக அகமதாபாத் தமிழ்ப்பள்ளியை தமிழக அரசு நிர்வகிக்கும் என்று செப்டம்பர் 24-ம் தேதி தமிழக முதல்வர் குஜராத் மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். பள்ளியை பாதுகாக்க குஜராத் மாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள் தொடர்ச்சியான போராட்டம் மற்றும் அதற்கான குரல் கொடுத்த வாலிபர் சங்கம் உள்ளிட்ட அனைவருக்கும் கிடைத்த வெற்றி  என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!