
அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் இணையும் முயற்சியில் எடப்பாடி அணிதான் ஓவர் ஆர்வம் காட்டுகிறதே தவிர பன்னீர் அணியோ கொஞ்சம் மேய விட்டுத்தான் மாட்டின் கயிறை அவ்வப்போது இழுத்துப் பிடிக்கிறது.
ஆனாலும் எடப்பாடி அணியை சேர்தவர்கள் விடுவதாக இல்லை. மதியம் பனிரெண்டு மணிக்கு ஆர்யபவன் வாசலில் ‘சாம்பார், அவியல், அப்பளம், பாயசத்துடன் மீல்ஸ் ரெடி’ என்று போர்டு வைப்பது போல் அடிக்கடி ’பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். உடன்பாட்டின் பேரில் அவர்கள் வைக்கின்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.’ என்று வாலண்டியராக வந்து உள்ளேன் அய்யா போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
பன்னீர் கோஷ்டியை சமாதானம் செய்து அழைத்து வர ஆள் மேல் ஆள்விட்டு பார்த்தும், அவங்க நடக்கும் போது கால் விட்டு பார்த்தும் எதுவும் வேலைக்காவது போல் தெரியவில்லை.
இவ்வளவு இறங்கி வந்து அழைத்தும் பன்னீர் அணி பாராமுகம் காட்டுவது எடப்ஸ் அணிக்கு ஓவர் டவுட்டாகதான் இருக்கிறது.
அதாவது ஆட்சி அதிகாரம், அமைச்சர்கள் பலம், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் ஆதரவு, ஏவலை செய்து முடிக்க அரசு அதிகாரிகள் என்று இவ்வளவும் நம் பக்கம் இருந்தும் பன்னீர் அணி பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால், அம்மா ஸ்டைலில் பன்னீரும் ஏதாவது மலையாள பணிக்கரை பிடித்து வைத்து பிரசன்னம் பார்த்திருப்பாரோ என்பதுதான்.
தங்களுடைய ஸ்பை பட்டாளத்தை பன்னீர் அணிக்குள் உலவவிட்டு சில தகவல்களை சேகரித்தார்கள். இவர்களது டவுட் வீண் போகவில்லை. பன்னீரின் ஜாதகத்தை வைத்து பிரசன்னம் பார்த்த ஒரு ஜோதிடர் ஒருவர் இரு அணிகளின் இணைப்பை தள்ளிப்போட சொல்லி சில தகவல்களை சொல்லியிருக்கிறார் என்றே தகவலாம்.
அதாவது ‘பன்னீர் செல்வம் கொறச்ச டைம் பொறுக்கணும். ஈ எடப்பாடி டீம் சீக்கிரமாயிட்டு ஃபீல்டு அவுட் ஆகும். ஆ சமயம், நிங்களோட டீம் தன்னே பவர் ஃபுல் பார்டியாயிட்டு எமெர்ஜ் ஆகும்.’ என்று பணித்திருக்கிறாராம்.
இதை கேட்டு ஃபியூஸ் போன எல்.ஈ.டி. பல்பு போல் கருகிப்போனது அமைச்சர்கள் சிலரின் முகம். ஆகா சோழிய உருட்டி நம்ம சோழிய முடிச்சுப்போட்டாரே அந்த பணிக்கர் என்று பதறியவர்கள் தங்கள் தரப்பிலிருந்தும் ஒரு வல்லிய கேரள ஜோதிடரை ரெடி செய்துவிட்டார்கள். அத்தனை அமைச்சர்களின் ஜாதகத்தையும் கேட்டிருக்கிறார் அவர்.
ஜெயலலிதா இருந்த காலத்தில் ‘எந்த அமைச்சரை எந்த துறைக்கு போடலாம், எந்த அமைச்சரை எப்போது தூக்கி தூர போடலாம்.’ என்பதெற்கெல்லாம் சம்பந்தப்பட்ட நபரின் ஜாதகத்தை வைத்தே முடிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கார்டனிலிருந்து பூங்குன்றன் எப்போ கூப்பிட்டு ‘அண்ணே உங்க ஜாதகத்தை கொடுங்க.” என்று கேட்பார் என்று யாருக்கும் தெரியாது.
அதனால் எனிடைம் துறை ஃபைலோடு சேர்த்து தங்கள் ஜாதகத்தின் ஒரிஜினல் காப்பியையும் தூக்கிக் கொண்டே திரிவார்கள் மாண்புமிகுக்கள்.
ஆனால் ஜெ., மறைந்து, சசியும் உள்ளே போன பிறகு தங்கள் ஜாதகத்தை, தொகுதிவாசிகளின் எந்த கோரிக்கை மனுவோடு சேர்த்து எங்கே போட்டார்கள் என்றே தெரியவில்லை. இப்போது இந்த ஜோதிடர் ஜாதகத்தை கேட்பதால்...பி.ஏ. உள்ளிட்ட தங்களை சுற்றி வரும் அல்லக்கைகள் ஏவிவிட்டு ஜாதகத்தை தேட துவங்கியிருக்கிறார்கள்.